Tuesday, August 14, 2018

எது விடுதலை

எட்டிப் பிடித்து  ஏறி தொட்டுவிட்ட
எழுபத்தியிரண்டாம் விடுதலை நாள் விழா
எதிரியை வென்றதன்  எழுச்சிப் பெருவிழா
எல்லையில்லா மகிழ்சித் திருவிழா
புதிதாய்ப் பிறந்த பாரதத்தாயின்
புதிய விடுதலைப் புதல்வர்கள் நாம்
புதியன புனைந்தோம்
புரட்சிகள் பல செய்தோம் மண்ணில்
விதியென வீழாமல்
மதி கொண்டு இடர் வென்று
கதியென ஞாலத்தில் நம் தலை நிமிர்ந்தே
சதிபல வென்று கவின் மிகு சாதனை பல கண்டோம்

வளர்சிகள் ஆயிரம் ஆயிரம்
வசதிகள் பல்லாயிரம் கொண்டோம்
வாழும் முறையில் புதுமைகள்
வையம் முழுதும் தொடர்பாடல் வசதிகள்
ஆயினும் என்ன பயன்
அறம்மறந்து அறிவிழந்து
தாயினும் உயர் மாதரை
நாயினும் கீழாய் நாகரிகமிழந்து
பச்சிளம் குழவி முதல்
பருவக்குமரி வரை பாகுபாடின்றி
எச்சில்காளிகளின் காமவெறி
இச்சைக்குத் தப்பியவர் யார்யாரோ

பாலியல் வன்கொடுமைகள்
பார்க்கும் இடமெல்லாம் தேசமெங்கும்
பாரதத்தாயே உன் நவயுகப்
புதல்வர்களின்  நாகரிக நிலைதனை பார்
வெறியுடை விலங்குகள் கூட இயற்கை
நெறிதவறி நடந்தில்லை
அறிவுடை மானுடமே நம்
அறம் மீறிய செயல்முறை சரிதானா?
நாளிதல் பக்கங்களில்
நாள்தேறும் பாலியல் கொடுஞ்செய்தி
நல்லவர் யாருமில்லையோ
நம் நனியுறு திருநாட்டில்

நாமெல்லாம் ஒரு தாயவள்
பெற்ற பிள்ளைகள் தானோ?
நானிச் செத்திடல் வேண்டும்
நற்பெண்மையின் பெருமை பேணிகாவாத நாம்
ஆணினத்தின் அடக்குமுறை
அழியாத சாதி ஆணவகொடுங்கொலைகள்
அனைத்திலும் பாதிப்பது பெண்ணினமே
அநீதிகள் விழுங்கிய அபலைகளுக்கு நீதியில்லை
ஊதிப் பெரிதாக்கி உளரித்திரியும்
ஊடக மாயைகள் உண்மையை
ஊனமாக்கி பெண்மையை கூறு போட்டு காசு பார்க்கும்
உலுத்த கசாப்புக் கடை காட்சியகங்கள்

சாட்சிகளை சட்ட நூலில் தேடும்
ஆட்சியின் மாண்புகள் நீதியை
காட்சிப்பிழையாய் கானல் நீராக்கி
காலாவதியாகிப் போகும் வரை
கண்கட்டு வித்தைகாட்டும் கைநிறைய
கையூட்டு பெற்று வாய்ப்பூட்டு
சட்டம் போட்டு வாழ்விழந்த மாந்தர் மீதே
திட்டம்போட்டு வழக்கும் போடும் ஐயகோ
தன்னில் பாதியை பெண்ணுக்கீந்து
தருமம் தழைத்த நாட்டில்
தாய்மையின் மாண்பினை
தரமிழந்து அழிப்பது தருமமா?

கண்மூடி கற்பழித்து நிதம் கெடும் கொலைவெறியாடும்
கயவர் கூட்டம் இம்மண்ணில் இனியும் வாழ்தலாகுமா?
கண்விழிப்போமா செவிதிறப்போமா
புண்மனத்தார் செயல்தடுக்க செயல்படுவோமா?
வன்மனத்தார் வாலறுக்க
விழித்தெழுவோம் விடைகொடுப்போம்
பெண்மையின் பெருமைகாத்து
நம்மை ஈன்றதும் ஒரு பெண்தான் என
தலைநிமிர்ந்தே தரணியெங்கும்
தாய்மையின் மாண்புதனை உறக்க முழங்குவோம்
தவறான தருதலைகளின்
கருவறுத்தே தாய்நாட்டின் புகழ் பரப்புவோம்


No comments: