Tuesday, March 11, 2025

இனிது இனிது

      இனிது இனிது


வறுமை வாட்டினும் கற்றல் இனிது

பெருமை மிகு அவையில் வாக்குத் திறன் இனிது

பெருத்த செல்வம் பெற்று இருப்பினும்

வருத்தி உழைத்து வாழ்வது இனிது



பொருளுடையவன் ஈகை இனிது

அருளுடைய சான்றோன் துணை இனிது

அருந்துணையின் மனம் அறிதல் மிக இனிது

அருமை நட்பு அதனினும் இனிது



குறையில்லா செல்வம் இனிது

குறையாத குணமுடை கல்வி இனிது

குற்றமில்லா ஒழுக்கம் இனிது

முற்றும் துறத்தல் நன்கு இனிது



மாண்புடை மானம் இனிது

மானமிழந்து வாழாமை இனிது

மனம் அஞ்சா வாழ்வினிது

மாற்றுக்குறையா மறம் இனிது



கற்றர் முன் கவியுரைத்தல் இனிது

கல்லார்க்கும் கல்வி ஈதல் இனிது

கயவர் கை சாராமை இனிது

கடுஞ்சொல் கலவாமை இனிது



நன்றி மறவாமை நட்பிற்கு இனிது

நல்வழி பிறழாமை வாழ்விற்கு இனிது

நடுநிலை தவறாமை நீதிக்கு இனிது

நாடியவர் துன்பத்தை நீக்குவது இனிது



ஆய்ந்து அறிதல் அறிவுக்கு இனிது

ஆராய்தல் அதனினும் இனிது

அழுக்காறு இல்லாமை இனிது

அடுத்தவர் பொருள்க்கு ஆசைபடாமை இனிது



சினம் கொள்ளாமை இனிது

சிற்றினம் சேராமை இனிது

சிறுமதியோர் உறவு கலவாமை இனிது

சீற்றம் இல்லா சொல் இனிது



வறிநிலையாயினும் வாய் திறாவமை இனிது

வம்பில்லா வாழ்கை இனிது

விதை பொருளை உண்ணாமை இனிது

விளை பொருளை மறைக்காமை இனிது



இன்சொல் இனிக்க சொல்லுதல் இனிது

இன்சுவையாவிலும் நகைசுவை இனிது

இனிய சுற்றம் சூழ வாழுதல் இனிது

இனிது இனிது எல்லாம் எங்கும் எவர்க்கும் இனிது



இயலிசை நாட்டியம் இனிது

இயற்கை வழி நடத்தல் இனிது

இன்பம் பொங்க வாழ்தல் இனிது

இனிய மனம் இன்பத்தில் எல்லாம் இனிது



கருத்துதவி ; இனியவை நாற்பது-

No comments: