Saturday, January 12, 2019

இனி விழிப்போமா?
திருநிறை வளம்செறி வானுயர்
பெரு பரு தரு நிறை படர்கொடி வளர்
இருள் சூழ் பெருங்காடு தேடி
கரு முகில்கள் தஞ்சமென கொஞ்சவரும்

கொஞ்ச வந்த வான் முகில் கூட்டம்
கஞ்சமில்ல கருணை கொண்ட
நெஞ்சம் நிறைந்த வள்ளலைப் போல்- நிலமகளின்
பஞ்சம் தனிய மழையமுதம் அள்ளித்தரும்

காய்ந்தொடிந்து தலை(ரை) சாய்ந்து
ஓய்ந்து இறைந்து கிடக்கும் மரத்தடியில்
பாய்ந்து வரும் பருவத்து மழைக்காக
ஓய்வின்றி உயிர்த்திருக்கும் ஓட்டுடனே விதைக்கூடு

துள்ளித் துள்ளி துளி வீழ்ந்த பின்னே ஓடுடைத்து
துளிர்த்தெழுமே தூங்கா விதையினைமுளை
துளிர்கின்ற தளிர்கான தூங்கும் கதிரவனும்
துள்ளி எழுந்திடுவான் அதிகாலை சற்றுமுன்னே

வெள்ளிக் கதிரின் இளங்காலை பொன்
ஒளியால் வெளிவிரிவானம் அழகாகும்
ஒளிசேர் குளிர் வனத்தின் புதுமூச்சால் சுழல்
வளியின் வெளியெங்கும் சுகமாகும்

குயில் கூவும் மயில் அகவும் சிறகடித்து
குறுஞ்சிட்டுக்குருவி கூட்டம் கிறிச்சிடும்
குரங்கினங்கள் குதுகளிக்கும்
குள்ளநரி கூட்டங்கள் செல்லமாய் ஊளையிடும்

வெள்ளெலிகள் வேடிக்கைகாட்டும்
வேங்கை புலிகள் வெய்யில் காயும்
வேழமது பிளிரி முழங்கும்
வேக மான்கள் துள்ளிக் குதிக்கும்

காகம் கரையும் கரிக்குருவி காணமிடும்
காதற்புறாக்கள் கவிபடிக்கும்
கவின் மலர் வண்டுகள் குழல் இசைக்கும்
கலையழகு கிளிகள் கொஞ்சும் மொழி பேசும்
இல்லாமை எதும் இங்கு இல்லை
இயலாமை என்பது எதுவும் இல்லை
முயல் ஆமை கூட இங்கு உண்டு
முயலாமை எனபதே எங்கும் இல்லை

புள்ளினம் உண்டு  புல் உண்டுவாழும்
புள்ளிமானினமும் நிறைய உண்டு
கொல்லும் கொடு மாக்கள் இங்குண்டு –ஆயினும் அவை
கொல்வதிலை கொள்வதற்கு அதிகமாய் எதையும்

களவாணி மானிடக்கூட்டம் கவனமின்றி
கருணையின்றி காடுகளின் கருவறையில்
கைவைத்தது தன் கருவும் கடைசியில்
கலைபடும் என்ற கவலையின்றி

இல்லாதன எதுவும் இல்லை இயற்கை தாயின் மடியில்
இயல்பை மீறிய தன்னலச் சுரண்டலால் ஏதும்
இல்லாமல் போகும் ஒருநாள் இனி விழிப்போமா?
இல்லை இயற்கையை அழிப்போமா?
12-01-2019


புதிய கல்விபுதிய கல்வி
--------------------------------------------------------------------------------------------
பள்ளி கூட பாட ஏட்டுப் பாரச் சுமைகளை
தள்ளிவைத்து விட்டு துள்ளி விளையாட
கள்ளிக் காட்டு கரிசல் பூமிப் பக்கம் கலார வந்த
பிள்ளை நிலாக்களின் பட்டறிவு உலா

காற்று நுழைய கூட கணம் தயங்கும்
வெற்று கட்டிடக் கல்விக்கூட சிறைகளில்
பெற்றுக் கொண்ட பாராயாண படிப்புகளை விட்டு
கற்றுக் கொள்ள களத்துமேடு வந்த பிஞ்சுகளின் திருவிழா

வீட்டை விட்டு விடுதலையாகி சிட்டு குருவியாக சிறகுவிறி
நாட்டை நாளை ஆளப்போகும் நீ பக்குவமாய் படி
காட்டை ஆளும் பாட்டாளிகளின்  பாட்டை- இது
ஏட்டை தாண்டிய விலையில்லா விளையாட்டுக் கல்வி

உணர்வுகளை கொன்று உயிர்களை
உண்ணத் தலை கொய்யும் உலகத்தினரிடை-ஆடு
உண்ணத் தழை கொடுக்கும் சின்னத்தம்பி
உண்மை அன்பில் நீ ஆனாய் தங்க(த)ம்பி

வெட்டி விடுதலை கொடு கட்டுண்டு
வெட்டுபட போகும் அந்த ஆடுகளின்
கட்டு தளைகளை விடை பெறட்டும்
விடைகளின் (ஆடுகளின்) அடிமை வாழ்வு முறை

மரத்துப் போன மனுட மனங்களில்
மறவாமல் ஊன்றிடுவோம் மலர்ச்சி விதைகளை
நட்பு மரங்களை நல்லபடி நட்டு வளர்த்திடுவோம்
நாமும் நாளைய உலகும் நலமுடன் வாழ
--------------------------------------------------------
நன்றி-வல்லமை மின்னிதழ், படக்கவிதைப் போட்டி 194
--------------------------------------------------------

என் பாட்டன் பாரதி

என் பாட்டன் பாரதி
வாய்ச்சொல் வீணரிடை
வாள்சொற் சுழற்றிய வீர அபிமன்யு
வசன கவிதைக்கு வித்திட்ட கவியுழவன்
வளர்தமிழுக்கு பா புரவி பூட்டி தேரோட்டிய கவிச்சாரதி

பெண்ணியத்தின் முன்னுரிமைக் காவலன்
கண்ணியத்தில் முறை தவறா நாயகன்
கண்ணனவனின் முத்தமிழ் சேவகன்
கண்ணம்மாவின் முழுமுதற் காதலன்

அச்சம் கொன்று இச்சகத்தை வென்ற ஞானசுடரொளி
உச்சிமீது இடிந்து வீழும் வானையும் துச்சமென
உள்ளங்கையில் பிடித்து பொடித்து வீசும் இரசவாதி
உயிர் புலன்களை உசுப்பி உயிர்பிக்கும் ஊழித்தீ

சாதிக் கொடுமைகளை சாடிய நீதி தேவன்
சமய தீமை சுட்டு வீர கானம் பாடிய என் தேசக் கவி
சிந்தனை ஒன்றுற விடுதலை வேண்டி கண்ட சந்திர சூரியன்
சின்ன குழந்தைக்கும் அறசீற்றம் போதித்த அக்கினி குஞ்சு

வையம் விழிப்புற உதித்த விடியலின் எழுகதிர்
ஐய்யம் தீர்த்து அறிவு அமுதூட்டிய ஆழிப் பெருங்கடல்
பொய்மையின்  உயிர் குடிக்க வந்த ஊழிப் பெருங்காற்று
மெய்மையின் மேன்மை தாங்கிய புதுபுனல் ஊற்று

எட்டையபுரத்து சுட்டெரிக்கும் ரௌத்திரக் கனல்
எட்டாதனவற்றையும் எட்டிதொட்ட கெட்டிக்காரன்
வெட்டிப் பேச்சு வீணரை எட்டி உதைத்து
வெட்டிச் சாய்க்கும் பாட்டுவாள்

சுட்டும் விழிச் சுடர் கொண்டு மடமை கொழுத்திச்
சுட்டு மாட்சிமையுரைத்த  மானுடக் கடவுள்
வெட்டும் மின்னலாய் மூடத் தனத்தை மோதி
முட்டிச் சாய்த்த முன்டாசு இடிமுழக்கம்

இரும்பைக் காய்ச்சி யந்திரங்கள் வகுத்திட சொன்ன இயந்திரன்
வரும் காலனை காலருகே வா என உதைத்த எக்காலகவிஞன்
ஒருவனுக்கு உணவில்லை எனில் உலகழிக்கும் மீசைக்காரன்
பாருக்குள் நல்ல பாரதத்தின் பாட்டுடை தலைவன் என் பாட்டன் பாரதி
                                                                                                            சு.பாஸ்கரன் 13/12/2018

உண்மை புத்தன்


 உண்மை புத்தன்

சுத்தோதன் மாயா பெற்றெடுத்த சித்தார்த்தன்
சுபயோக வாழ்வை விட்டொழித்த எதார்த்தன்
சுழல் பிறவிக்கடல் கடந்த சாக்கியன் 
சுமையான ஆசையை சுட்டெரித்த  கதிரவன்

இதழிடை இணைபிரியா புன்னகை
இமை மூடி திறந்தும் திறவா இறைநிலை
இன்பத்தின்  இனிமை கண்ட உயர்நிலை
இன்னலுக்கு விடையளித்த பொதுநிலை

பற்றிப்படர் கொடியில் படுத்துறங்கும்
பற்றற்றான்- இவனை பற்றிவிட்டால்
பற்றிய பேராசை பெரும் பாவம் எல்லாம்
பற்றியெரியும் பெரும் தீயில் வீழ்ந்த சருகாய் பட்டுவிடும்

எண்ணம்,கருத்து, பேச்சு, செயல்
எளிய வாழ்க்கை, முயற்சி, சித்தம், தவம் என நேரான
எண் வகை பாதை கண்டான் இதில்
எப்பாதை வழி நீ சென்றாலும் நேர்மை வேண்டும் என்றான் 

முழுமதி நன்னாளில் மூவுலகும் இன்பமுற
முகிழ்த்த ஞான முதல்வன்- இருள்
மூழ்கிய இன்னல் சூழ் உலகுக்கு
முழுமுதல் அருள் போதித்த அன்பின் தலைவன்

அன்பு விதை துவிய வித்தகன்
அமைதிப் பயிர் வளர்த்த போதி சத்துவன்
ஆசை துறந்த சிந்தனைச் சித்தன்
ஆன்மத்தை வென்ற உண்மை புத்தன்
29/12/2018


http://www.vallamai.com/?p=89887
நன்றி -படக்கவிதைப் போட்டி 193-இன் முடிவுகள் Tuesday, January 1, 2019,


Saturday, November 03, 2018

உறக்கப் போர்வையை உதரி எறி


 
உதய சூரியன் உறக்கம் கலைத்தும்
உதரி எறியாத போர்வைக்குள் நீ
உள்ளம் மூடிய உணர்வற்ற
உறக்க நிலையில்

உனக்கு எப்படி விடியும் ?
உனது பகல்கள்
உன்னை விட்டு நீ
உணர முடியாத தொலைவில்

தொலை தூரம் சென்றது
தொல்லை என கலைந்த
கனவுகளிக் காட்சி அலைகளுக்குள் நீ 
கண்ணாமூச்சியாடுகிறாய்

சோமபல் மடங்களில் உனது
சொர்க்கம் சுகமடைகிறது
சாறு உறுஞ்சும் தத்துப் பூச்சியாய் நீ
சோறு போட தாயும் தந்தையும்

சாம்பல் பொடிகளை
சலனமின்றி
சந்தன சாந்தென நீ
சிந்தையின் சிந்தனையில் பூசிக்கொண்டாய்

சிறு தீப்பொறி
பெருங் காடுகளை கூட
பற்றி எரித்திருக்கலாம் நீ
பனிகட்டியானால் அவை என்ன செய்யும்?

பாதையோ கரடு முரடு உன்
பார்வையோ நிறக்குருடு
பயணம் தொடர்வது இனி
பயணற்றதென பலர் சொல்வார்

பரிசு பெரும் போட்டி ஓட்டத்தில்
பந்தைய குதிரைகளுக்கு
பாய்வதில் மட்டுமே
பலமான நம்பிக்கை இருக்க வேண்டும்

உலகில் உயர்தவை அணைத்தும்
உன்னால் தொடமுடியும்
தோல்விகள் தொடர்களை உனது
தோல்களில் தாங்கி வெற்றி நடை போடு

கம்பளங்கள் விரித்த
கவின்மிகு களங்களில் மட்டும் உன்
கால்கள் பயணிக்குமானால்
காலம் காத்திருக்காது

கற்களும் முற்களும்
கால்கள் மிதிக்கும் போது மட்டுமே
காயப்படுத்துகின்றன நீ
கவனமாய் கடந்து பார்

கை குலுக்க காட்டுப் பூக்களை
கொய்து கொட்டித் தூவி
காத்திருக்கும் நீ
கண்விழித்து காளையென பவனி வருவாயென

சாம்பல் பொடிகளை
சற்றே துடைத்து எறி
சன்ன தீப்பொறியை
சின்ன இதயத்தில் உதயமாக்கு

சிறை கொண்ட
உறை பானிக் கட்டிகள்
கரையற்ற காட்டாற்று ஓடையாய் உன்
கறைபட்ட இதயத்தை கழுவி துய்மையாக்கும்

கனவிகள் கை விலங்கிடப்பட்டு
நனவு உலைக்கலத்தில்
நகைகள் செய்ய நல்ல முறையில்
நசுக்கப்படும்

உறக்கப் போர்வையின்
உயிர் முடிச்சு
உருவி அவிழ்க்கப்பட்டு
உணர்ச்சி மூச்சு உன்னுள்
உட்செலுத்தப்படும்