Friday, August 07, 2015

(ந)மது (தமி)மகிழ் நாடு



(ந)மது (தமி) மகிழ் நாடு

(ந)மது (தமி) மகிழ் நாட்டு மன்னனுக்கு கொஞ்சநாளாய்
மண்டை குடைச்சல் மக்களில் பாதி
மதுக் கடை மறியலில் திடுமென குதிக்க
மயங்கி கிடக்கும் மீதியோ பொது வேலை நிறுத்தம் செய்ய
மலமலவென போராட்டம் வளர்ந்தால் என்னாவது என்ற அச்சம்

அழைத்தார் அவர் ம(து)தியுக மந்திரிகளை
அடக்குங்கள் அவர்களை ஆணையிட்டார்
அரசுக்கு அள்ளிக் கொடுக்கும் அடிமைகள்
அறிவு பெற்றால் ஆட்சியாள முடியாது
அடுத்த ஆண்டு தேர்தலில் நமது கட்சி அதோகதிதான்

அக்கம் பக்கத்து நாட்டுஅரசுகள் எல்லாம்
அணைகள் கட்டி ஆலைகள் திறந்து தொழில் வளர்த்தால்
அன்றாடங்காச்சி மக்கள் உழைத்த பணத்தை (ந)மது (தமி)மகிழ் நாட்டு
அரசு வீதிகள் தோரும் விரிவு படுத்துகிறது மதுக் கடைகளை
அதற்கருகிலேயே அமர்ந்து அருந்த மதுக்குடில்கள் வேறு

வருவாய் ஈட்ட வாராவாரம்  
வரவு செலவு கணக்குப் பார்த்து
விற்பனை இலக்குகள்
விரிவு படுத்தப் படுகின்றது - உபரியாய்
விற்றவருக்கு ஊக்கத்தெகை வேறு

உள்ளூர் திருவிழாவானாலும் சரி
உலகத் திருவிழாவானாலும் சரி
உற்சாக பானத்தின் விற்பனை சரிந்ததிலை
உயிரை இலந்தவர் இலக்கமும்
உற்பத்தி இலக்கும் உயர்ந்தவாரே
 
”சரக்கு”ச் சந்தையில் அரசியல் சமத்துவம்
சரியான கலவையால் சாராய முதலாளிகளாக, தம்பிகளும்
சகோதரிகளும் சம்மாகவே சம்பாதிக்கறார்கள்
சாக்கணாக் கடை நடத்துவதில் கூட  இரத்தத்தின் இரத்தங்களோடு
சமபந்தியில் உடன்பிறப்புகளும் சம்பந்திகளாக

நாட்டு மக்களுக்கு சீர் வரிசை இலவசமாய் சாராய காசுலதான்
வீட்டுக்கு வீடு விலையில்லா ஆடு, மாடு
விசிறி விட மின்விசிறி, மாவாட்ட அம்மி செக்கு, ஆட்டுக்கல்லு
ஆட்டம் பாட்டத்துக்கு வண்ண தொலைகாட்சி பெட்டி
ஓட்டுக்கு ஓர் ஆயிரம் காந்தி பணம் என வீசி எறிந்தாங்க

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடினால் கூட
தண்ணி பஞ்சம் தலைகாட்டிதிலை
தன்னேரில்ல தமிழகத்தின்
தள்ளாடும் குடிமகன்(ள்)களால்
தள்ளாடாமல் நடைபோடுகிறது நமது அரசு

கல்வி சாலைகள் எல்லாம் தனியார்வசம்
கள்ளுகடைகள் எல்லாம் அரசுடமை பிள்ளைகள்
கல்வி பயில செல்லும் பாதை எங்கும் மதுக்கடை பதாகைகள்
கல்லூரி பள்ளிகளுக்கு அருகேயே
கலப்படமில்ல சுத்த சரக்குகடை

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
மடையரகள் யார் சொன்னது
மது வீட்டுக்கு மட்டுமே கேடு - அது
மாநிலத்தின் வருவாயை உயர்த்தும்
மந்திர வித்தையின் மையக் கோடு

குடி குடியைக் கெடுக்கும்
குடிப் பழக்கம் உயிரை குடிக்கும்
குடிப்பது தனியுரிமை தான் ஆயினும் சிந்திப்போம்
குலம் அழிக்கும் குடியை ஒழித்து
குலம் காத்து குணம் காப்போமே                                               சு.பாஸ்கரன்   07/08/2015

படங்கள் உதவி: http://www.tamilhindu.com

No comments: