Wednesday, October 13, 2021

கடலோர காற்று

 கடலோர காற்று கவி பாடென்று சொல்லுது

கரை தாலாட்டும் அலையோ கைநீட்டி செல்லுது

கண்கண்ட காட்சிகள் என் நெஞ்சோடு பேசுது

கனவின்று நனவானது காத்திருத்தல் நலமானது

 

நானுமோர் குழந்தை யானேன்

நாளுமோர் புதிய ஞானம் பருகிப்‌‌‌ போவேன்

நாளையோர் புதிய உதயம் காணுவேன்

டக்கு மோர் எழுச்சி நடந்திட்டால் மகிழுவேன்

 

ஈரக் காற்று இன்னிசைக் கோர் ஊற்று

ஈதல் ஒன்றே  இனிய  ‌‌‌‌‌‌‌‌‌வாழ்வின்  உயிர்ப்பு

ஈன்ற தாயின் மடியாக இயற்கைக் தாயின் நீர்க்கரை

ஈடில்லா இன்பம் கோடி தேடி வந்த சுவரக்கம்

 

வான் புள்ளினங்கள் வரிசையாய் வலசை செல்லும்

வண்‌‌‌ணக் கிளிஞ்சல்கள் வாரிச்சுருண்டு வரும்

வாரிக் கடல் அலையினிலே ஏறி மிதந்து வரும் அதன்

வருகையும் புறப்பாடும் ஓர் ஒழுங்கு குழையா நிலையாகும்

 

துறுதுறு சிறுசிறுநண்டுகள்  குருகுரு நீர்மணலில்

விறுவிறுவென  விரைந்து குழி தோண்டும்

சரசரவென இரைந்து வரும் பெருந் திரையதை

பரபரவென கரைத்தே சலசலவென களிகொள்ளும்

 

புல்வெளிப் பனித்துளி எழில் பருகிய என் விழியால்

புனல் வெளியின்  புதுமை கண்டேன்

புதிதான பூவுலகம் விதவிதமாய் விரியக் கண்டேன்

புன்னகையாய் உவகை கொண்டேன்

 

கண்ணெட்டா கடுந் தொலைவு கடல் வெளியில்

கட்டுமர மிதவையிலே கழிவழி கைவழி வலை வி(ரி/தை)க்கும்

கடலுழவன் செம்படவன் நிறை குறையா திரை

கயல் திரவியம் சேர்த்து நலமுறவே கரை வர வேண்‌‌‌டும்

 07-10-2021

யாழ். பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679

basgee@gmail.com
noyyal.blogspot.in

  

No comments: