Monday, November 04, 2019

பூங்கிளிகள்

கதிர் விழித்த இளங்காலை வேளையிலே
கதிர் விளைந்த சோளக்கொல்லை எல்லையிலே
கதிர் கொய்ய வந்த கான் கிளிக்கூட்டத்தில் என்விழிக்
கதிர் கண்டுவியந்த கண்கொள்ளாக் காட்சியிது!
பச்சைப் பசுங்கிளிகள், பறந்து திரியும்
பசுஞ்சோலைப் பூங்கிளிகள் இரண்டும்
இச்சை கொண்டு இணைந்திருக்கும் இன்பக் காட்சியிது
இணையில்லா இயற்கையின் ஆட்சி இது!
செம்பவள மூக்கழகில் செயலிழந்தேன்
செழும் மஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்
சேர்ந்த இரு விழியின் இணையழகில்
சொந்த நினைவினை நானிழந்தேன்!
விழித்தெழுந்தேன் விளைந்த கற்பனை
மொழிவிடுத்து வியனுலகில் நடைமுறையில்
மெலிந்த பல்லுயிர்களுக்கு விளையும் கேடெண்ணி
அழிந்த அவற்றின் கூடெண்ணி ஐயுற்றேன்!
வஞ்சனையாய் வலைவிரித்துச் சிறைப்பிடித்து
வாயினிலே சூடுவைத்து வாலறுத்து
வண்ணப் பசுஞ்சிறகை வன்முறையாய் வெட்டிவிடும்
வஞ்சகர் கையிலினிச் சிக்காது விழிப்புடனே பறந்திடுவீர்!
முக்காலம் அறிந்திடவும் முயற்சிக்கா வாழ்வின்
முழுப்பயனும் தெரிந்திடவும் மூளையில்லா
மூடர்சிலர் இக்காலத்தலும் உங்களைக் கூண்டிலிட்டு
மூக்காலே சீட்டெடுக்க முடுக்கிடுவார் சிக்காதீர்!
மாமதுரை அரசாளும் அங்கயற்கண்ணி
மங்கை மீனாட்சி திருத்தோளில் அமர்ந்திருக்கும்
மங்களக் கிளிகள் உங்கள் அருளாலே மாநிலத்தில்
மங்காமல் பசுஞ்சூழல் தழைத்தோங்கட்டும்!

No comments: