Tuesday, May 29, 2018

கொலைப்பலி ஆலை

கொலைப்பலி ஆலையை உடன் மூடுக



முத்துக் குளித்த தென் பாண்டி தூத்துக்குடியில் இன்று
கெத்து கெத்தாய் எம் தமிழ் மக்கள்
பொத்துப் பொத்தென்று பத்துப் பன்னிரண்டாய்
செத்து செத்து மடிந்ததை காண்டீரோ!

காக்கை குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளிவிட்டார்
கண்மூடி கண் திறப்பதற்குள் கண்மூடித்தனமாய்
காவலனை நோக்கி வந்தார் கால்நடையாய் நீதி கேட்டு
காலனாய் வந்து உயிர் குடித்தது காவலர் துப்பாக்கி குண்டு

காற்று நீர் நிலமெல்லாம் மாசு தந்து- கொடும்
கூற்று தொழிற்சாலை இது வேண்டாம் என்று
நேற்று இன்றல்ல ஒரு கால் நூற்றாண்டாய் போராடி
தோற்ற சனங்களெல்லாம் புறப்பட்டது ஒன்றாய்

சுற்றுச் சூழலை சூறையாடி
புற்று நோயை பரிசாக்கி உயிர்குடிக்கும்
தொற்று நோய் ஆலையிது ஊருக்கு ஆகாதென நீதி கேட்க
சுற்றுப்புற புற மக்களெல்லாம் திரண்டுவந்தார்

அழைத்துப் பேசி அமைதிப்படுத்தாமல்
இழைத்துவிட்டீர் அநீதியை அறிவிழந்து
அறம்மீறி அதிகாரப் பேதையில்
அழியா களங்கம் தீரா பெரும் பழியில் விழுந்து விட்டீர்

வாழவைப்பீர் என்று எண்ணி
வாக்களித்த மக்கள் தம்
வாழ்வழித்து வளமழித்து வாயில்
வாய்கரிசி போட்டுவிட்டீரே
 
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயவள் துடிப்பதை பார்
பத்தினியாம் பதிவிரதைகள் பரிதவிப்பதை காண்
எத்துணையோ வழிகள் அமைதிக்கு
இத்துணை உயிர்ப்பலி கொண்ட உமக்கு இனி எதற்க்கு மணிமுடி

குற்றமென்ன கொற்றவனே
குடிமக்கள் மனமறிய மன்னவனே
முடியாட்சி காலத்தில் கூட நடந்ததில்லை இதுபோல
முட்டாள் ஆட்சி என்பது இதுதானோ

வாக்குகளை விலைபேசி விற்ற நாம்
வட்டியும் குட்டியுமாய் வாங்குகிறோம் குண்டடிகள்
வாய்மையுள்ளவனுக்கு வாக்களித்திருந்தால் வாழவைத்திருப்பார்
வளமாக வருந்தி என்ன இனியாவது திருந்திடுவோமா?

திருட்டு கொள்ளைக் கூட்டம்
திரைமறைவில் போடும் கூட்டுப் பிரிக்கும் ஆட்டம்
குருட்டு ஏழை மக்கள் நாம்தான் இன்னும்
இருட்டிலேயே ஓடிக்கொண்டு இருக்கின்றோம்

ஊடக வெளிச்சத்தில் உண்மையை ஊமையாக்க
உடன்பாடு செய்துகொள்வார்
உடனடி நாடகங்கள் பல வண்ண வண்ண
உடை மாற்றி நடித்து ஊரை ஏய்த்திடுவார்

கோவலன் கொலைகளப்பட்டது தவறென அறிந்த
கோமகன் பாண்டிய செழியன் துறந்தான் உடன் உயிரைஐயன்மீர் நீர்
கோவேந்தனை போல் நீதியை நாட்ட வேண்டாம் குறைந்த்து
கொடும் கேடுடை கொலைப்பலி ஆலையை உடன் மூடுக


No comments: