Monday, July 06, 2009

நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும்

அன்னையின்றி எவரும் இந்த


மண்ணைக் கண்டதுண்டோ தமிழா!- அந்த

அன்னை காட்டிய மண்ணையிழந்த

உன்னை மண்ணில் மதிப்பாருண்டோ தமிழா!



முன்னைய பழங்கதைகள் பல பேசியே

முழுவதையும் தொலைத்துவிட்டோம் தமிழா! –நம்மில்

முரண்பட்டுக் கிடந்ததன் விளைவுதானே இன்றைய

முட்கம்பி வேலி கொட்டடி சிறையடா தமிழா!



கொத்துக் கொத்தாய் உன் குருதி உறவுகள்

செத்து மடிந்தபோது பக்கத்தில் தானே இருந்தாய் தமிழா!

அத்தனை கொடுமைகள் கண்டும் காணதவனாய் உன்

நித்திய பணிகளுக்குள் அமிழ்ந்துவிட்டாயே தமிழா!



வாழ்விடமிழந்து வாழ்வினையுமிழந்து

வழியின்றி வலியோடு வந்தவர்தமை

வாரியணைத்தோம் நாம் ஆயினும் அவர்

வாழ்வில் இன்புற வாழவைத்தோமா? தமிழா!



தனித்தனியே பலர் நம்மில் பல

தியாகங்கள் புரிந்தோம் தமிழா!

ஆயினும் அவையாவும் விலலுக்கு

இறைத்த நீராய் ஆனது தமிழா!



நாளை ஒருவேளை உனக்கிந்த

நிலை வரலாம், வரும் தமிழா!

அன்று எவர் வருவார் வந்துனக்கு உதவுவார்

என்று எண்ணியதுண்டோ தமிழா!



ஒன்னாம் வகுப்பு பிள்ளைகட்கு ஒன்று பட்டால்

உண்டு வாழ்வென்றுணர்த்த நான்கு எருதுகளும்


ஒரு சிங்கமும் என்ற கதை சொன்னோமே தமிழா!

அது அவர்கட்கு மட்டும் தான் நமக்கில்லையோ தமிழா!



இந்திய, ஈழ, மலையக, மலேய, கனடிய

சிங்கை தமிழர் என்று இன்னும் பல பல பிரிவுகள்

நம்மில் இன் நிலை ஒழித்து என்று எங்கு சங்கம்மாவோம்

சங்கத் தமிழராய் சிந்தித்ததுண்டோ தமிழா!

No comments: