Wednesday, November 19, 2008

மது+மயக்கம்=மரணம்

மதுவெனும் போதையில் விழுந்துவிட்டான்
மதிப்புறு தாயையே விழுங்கிவிட்டான்
மதிமயக்கும் மதுவின் மாயையினால்
மனம் பழக்கி வாழ்வினை அழித்துக் கொண்டான்

தினம் தினம் குடித்து வந்தான்
பணம் பணம் என்றே பறித்துச் சென்றான்
மனம் போன போக்கிலே நடந்து கொண்டான்
மானம் போனது அறியாமல் மயங்கி நின்றான்

குடும்பமது வறுமையிலே
குழந்தை குட்டிகள் பட்டினியால்
குடிப்பதற்கு கூழுமில்லை
உடுப்பதற்கு துணியுமில்லை

கஞ்சிக்கு வழியில்லை
கால் காசு வரவில்லை
கட்டியவள் கெஞ்சினாலும் விடுவதில்லை
கொடுங்குடியால் கெட்டழிந்தான்

நஞ்செனும் மதுவினை நாடியதால்
நல்வாழ்விழந்தான்
நாடி நரம்புகள் தளர்ந்து
நடைதடுமாறி நிலைகுலைந்தான்

மொந்தையில் கள்ளுண்டு கட்டிய
கந்தையையும் கிழித்துக் கொண்டு
மந்தையிலே மல்லாந்து நீ கிடக்க
சந்தையிலே புதுசு புதுசா பலசரக்கு

கொண்டு வந்து இறக்குதடா நமதரசு
கண்டுங் காணம குடிச்சவன் கூட
கண்டபடி குடிச்சுக் குடிச்சு – தன்
கணக்கை முடிச்சுக்குரான்

பள்ளிக்கூட வாசலுக்கெதிரே
கள்ளுக்கடைகள் நாள் கணக்கா திறந்திருக்கு
பிள்ளைகள் நெஞ்சில் கல்விக்குப் பதிலா
கள்ளின் போதை நிறைஞ்சிருக்கு

சாராயம் விற்கும் காசுலதான் நம்ம
அரசாங்கம் நடக்குது
வரவு செலவு கணக்கை எல்லாம் குடிகாரன்
தரும் வருவாயே தீர்க்குது

குடிமகன்களே இனியாவது குடித்து குடித்து
குடல் வெந்து உடல் நொந்து சாகாமல்
குடிகெடுக்க்கும் குடியைவிட்டு ஒழி – உன்
குடும்பம் நலம்பெற விழிதிற விரியும் நல்வழி

முயன்றால் முடியுமடா உன்னால்
முரண்டு பிடித்தால் முடிவு பெரும் தொல்லையடா
இருண்டு போகும் வாழ்கையடா - இனி
இடுகாடு மட்டும் தான் உன் எல்லையடா

No comments: