Monday, September 29, 2008

இன்பம் பயக்கும் இன்சொல்

மக்கள் மறந்தனர் இன்சொல் மாற்றாய்
மொழிந்து மகிழ்ந்தனர் இன்னாச்சொல் - ஆதலில்
உறவிடைப் பிரிவும் உயர் நட்பிடை பிளவும்
உள்ளுரை அன்பிடை முறிவும் கண்டது கேளீர்!

உணர்விடை ஊறிய அலுக்காறும்
உள்ளத்திடை உழலும் அவாவும் , வெகுளியும்
உட்புகுந்த்தால் வாழ்வு நிறைகுடப் பாலில்
உறையிட்ட துளி நஞ்சாய் திரிந்திடல் காணீர்!

மனிதம் போற்றிய மாண்புகள் மறைந்தன
மாண்புகள் தாங்கிய மனிதரும் மறைந்தனர்- பிறர்
அஞ்சிட வன்சொல் தினம் ஓதிடும் கொடும்
வஞ்சம் வளர்த்த நெஞ்சின்ராய இன்றாயினர் பாரீர்!

செந்தனல் கக்கிடும் கொடும் நாவினில் இருந்து
வந்து விழும் சுடுசொற்கள் கொல்லன் உலைகளத் தீயில்
வெந்து பழுத்த இரும்பு கம்பி கொண்டு
நெஞ்சில் இழுத்தலினும் கொடிதாம் உணர்வீர்!

கற்கண்டு சொற்கள் இங்கே காத்துக்கிடக்குது அதை
கற்றிடுவோம் அதன் கருப்பொருளுணர
கற்றவைதனையே கறையிலா வாக்காய்
கலையுற செப்பி கேட்பார் செவியினிக்க செய்வீர்!

மொழியும் மொழிதனில் வழுவிருப்பின் வரும் பழி
தெளிவிலா மொழியும் தேவையிலா ஒலியும் பிணியாம்
விழி வழிகொண்டழைத் துறவை நல்மொழி நவின்றால்
ஒளி முகம் பூத்து களிகொள்ளும் விருந்து அறிவீர்!

பண்புடை மாந்தர்கழகு பணிவுடன் மொழிதலாம்
மண்பதை காக்கும் மன்னவராயினும் - பண்ணிசை போலே
நன்மொழி மொழிதல் அவர்க்கழகாம் - வெண்பனி போலே
மென்மொழி மொழிதல் யாவர்க்கும் அழகு மொழிவிர்!

குப்பைச் சொற்கூட்டி கொச்சை மொழி பேசி
இச்சை தனிதலால் இல்லை பலன் ஏதும்
இனிய கனிஇருக்க இன்னாத காய்கவர்தலை
இனியாவது தவிர்த்திடுவோம் செய்வீர்!

பயனிலா சொற்கள் பேசி
பயன் நிறை காலம் தனை
பயனின்றி கடத்திவிட்டு போவதனால்
பயன் என்ன வென்று சிந்திப்பீர்!

வள்ளுவன் வகுத்த சொல்லியல் நெறிகளை
வழுவாது பற்றி நடப்போம்
வாக்கினில் தூய்மை காத்து
வாழ்வில் துன்பம் குறைப்போம் வாரீர்!

அமுத தமிழின் அழகு நடையில்
அன்பெனும் இன்பம் பொங்க ஆசையோடு
அளாவி மகிழ்வோம் ஆனந்த களிகொண்டே
அனைவரின் உள்ளதையும் ஆள்வோம் வாரீர்!

No comments: