ஏனடா தமிழா?
ஏனிந்த இழிநிலை
எட்டி உதைத்து
எச்சில் உமிழ்ந்து
எள்ளி நகைக்கிறது உலகம்
ஏவல் செய்யும் எடுபிடியாய்
எடுப்பார் கைப்பிள்ளையாய்
எல்லோரும் ஏறிச் செல்லும்
ஏணியாய் நீ இருப்பதனால் தான்
ஏமாளி என்று எண்ணிவிட்டார்
எல்லையைச் சுற்றி எங்கும்
எல்லையில்லா எதிரிகள்
ஏதேனும் தொல்லை கொடுத்தே
எதற்கெடுத்தாலும் எதிர்கின்றார்
என்ன செய்கிறாய் நீ?
செழித்தோடிய கடற் காவிரி
முல்லைப் பெரியாறு
வெள்ளைப் பாலாறு – என
வெம்புனல் பொங்கிய நதிகள் எல்லாம்
கொள்ளை போனது அயலரிடம்
நொய்யல் நதிதனை திருப்பூர்
பின்னல் ஆடை சாயகழிவுக்கும்
தாமிரபரணித் தண்ணீரை
தனியார் தண்ணீர் ஆலை
தாகத்திற்கும் தாரை வார்த்தாய்
உள்ளூர் நதிகளும் ஊரணிகளும்
உருக்குலைந்து போனது
உன் வாழ்வாதார
உரிமைகள் பறிபோயும்
உன் நெடுந்துயில் கலையவில்லை
தாய் தமிழகத்தில் தமிழன்
தண்ணீருக்கு கண்ணீர் சிந்துகிறான்
தனி ஈழம் வேண்டியே
தென் தமிழன் சென்நீர் சிந்துகிறான்
தமிழனென்பதால் தான் இந்நிலையோ?
தமிழர் என்றோர் இனமுண்டு –அவர்க்கு
தனியொரு குணமுண்டு என்பது தவறா? தாரணியில் என்றும்
தழ்வுற்று கிடப்பது தான் உன் குணமா?
தமிழா நீயும் தன்னிலை உணர்வது என்நாளோ?
வான் உனது! வளி உனது!
வையத்தில் வாழ்வதற்கு
கலனளவு நீரும்
கையளவு நிலமும் மட்டும்
உனக்கு கானல் நீரா?
எழு தமிழா எழு எரிமலையாய்
எதிர் நிற்கும் உன்பகை வெல்ல
எள்ளி நகைத்து ஏளனம் செய்தவர்
எல்லாம் இனி எழுந்து வணங்கட்டும்
உன் தலை கண்டால்
1 comment:
நல்ல வரிகள்..
அர்த்தம் அதிகம்..
Post a Comment