Wednesday, July 25, 2007

வானம் வசப்படும்

விடியல் பொழுதில்
விரி கதிர் எழுகையில்
விண்ணில் பறக்கும் புள்ளினம் போல
விழித்தெழு தோழா

வெளியெங்கும் ஒளியுண்டு
வெற்றிடம் ஏதுமில்லை
விழி திறந்து நோக்கு
வெற்றியின் வழி திறக்கும் தோழா

புல் நுனி பனித்துளியாய் இருக்காதே
பூக்களின் தேன் துளியாய்
புன்னகை புது மொழியாய்
புரட்சிகள் பல செய்ய எழுவாய் தோழா

கையில் கிடைப்பதை
கவனமாய் பற்றிக்கொண்டு
கவலைச் சுமைகளை
களைந்து எறி தோழா

உழைப்பின் ஏணிப் படிகளில்
உண்மையின் துணையோடு
உன் கால்களை ஊன்றி நடந்தால்
உயர்வு கிடைக்கும் தோழா

மண்ணில் நம் பிறப்பு
மண்ணோடு மடிவதற்கல்ல
மானுடம் தழைக்க
மனிதம் வளர்ப்பதற்காக தோழா

வாய்மை வழிதனிலே
வலிமையோடு நடந்து பார்
வாழ்வும் வசந்தமாகும்
வானமும் வசப்படும் தோழா

No comments: