நதியோடு விளையாடி
கொடிமலரோடு உறவாடி
வயல் நாற்றைத் தழுவ
நடந்தோடும் பூங்காற்றே
நான் பாடும் பாட்டை
கொஞ்சம் உன்னேடு எடுத்துப்போ
விண் தேடும் முகிலுக்குள்
மண் தேடும் மழைத்துளிகள்
குளிந்துறைந்து
சிறையிருந்து பிறந்தெழுந்து
சீறிப்பாய்ந்து பொங்குவதுபோல்
உள்ளத்தின் கருவறையில்
உண்மையின் சூல் தாங்கி
உணர்ச்சி வெள்ளத்தில்
உருவான கவி குழவியிது
உயிரின் துடிப்பலையில்
உறவின் படிப்பிணையை
உணர்த்தும் உதயமிது
நீள் வானில் நீந்தி வரும்
நிலவைப் போல்
நீங்காத குளிரைத் தரும்
கீழ் வானின் இருள்
கிழித்து கிழக்குதிக்கும்
கதிரைப் போல
ஒளியைத் தரும்
உவகையளித்திடும்
உழைப்பை வளர்த்திடும்
களைப்பை அகற்றிடும்
கனிவைப் பொழிந்திடும்
கவலை அறுத்திடும்
காலமெல்லம் நிலைத்திடும்
இயற்கையை புகழ்ந்திடும்
எண்ணம் கொண்ட
என் பாட்டை
இளங்காற்றே - நீ
இவ்வுலகின் பரப்பில்
இன்ப ஓவியமாய் தீட்டிப் போ.....
No comments:
Post a Comment