
வாழ்வும் வசந்தமும்
முதல் பார்வையிலே
முத்திரை பதித்தவளே
இதழோர குறுநகையில்
என் இதயம் கிழித்தவளே
பளிங்கு சிலையோ
பருவத்தின் எழிலோ
பல நாள் தவத்தின்
பயனாய் உனை கண்டேன்
கற்கண்டோ
கரும்புச் சாறோ
கனிச் சுவையோ
கன்னி உன் அழகு
குயிலின் கீதமோ
குழலின் நாதமோ
குறளின் வேதமோ
குமரி உன் பேச்சு
குடகு மலையின்
குறுத்திலை தொட்டு
குதித்து வரும்
குளிர் அருவி உன் நடை
பட்டு துகிலோ
பனியின் குளிரோ
பவுர்ணமி நிலவோ
பாவை உன் முகம்
பழ ரச நதி நீ
பாய்ந்திட காத்திருக்கும்
பாலை நிலத்துபயிர் நான்
உணர்வுகள் எங்கும்
உன் நினைவுகளே
கனவலை பொங்கும்
கடலாய் என் இரவுகளே
விடியலின் உதயமாய்
விண்வெளிப் பேரொளியாய்
வெண்நிலவு முகம் தாங்கி வரும்
பொன்னுலக தேவதை நீ
மண்ணாய் கிடந்த என் நிலத்தில்
மணிகளை விளைவித்தாய்
மலடாய் கிட்ந்த என் வயலினில்
மலர்களைப் பூக்கவைத்தாய்
மூலம் தந்தவர் என் தந்தை
முகம் தந்தவர் என் தாய்
மூளை தந்தவர் என் குரு -நீயோ எனக்கோர்
முகவரி தந்து நின்றாய்
என்ன தவம் செய்தேனோ
எழிலரசி நீ என் துணைவர
எண்திசையும் உன் புகழ் பரப்புவதே
என்றும் என் பணி
நீயே என் கதிநீயே
என் மதிநீயே என் நிம்மதி
உன்நினைவே எனக்கு வாழ்வும் வசந்தமும்
No comments:
Post a Comment