Tuesday, November 14, 2006

நினைப்பதெல்லாம்

நெஞ்சுக்குழி ஓரத்திலே
பஞ்சுச் சுவர் பக்கத்திலே
நெருப்பு துண்டொன்று - என் விருப்பு
வெறுப்பின்றி வந்து விழுந்ததடி

நிலைக்குமென நான்
நினைத்திருந்த வாழ்வு - நிமிடத்தில்
நிலைகுழைந்து
நினைவுக்கு எட்டாது போனதடி

மனக்கோட்டை கட்டிவைத்தேன்
மங்கை உனைக் கைபிடிக்க - அது
மழை வெள்ளத்தில் கரைந்த
மண்கோட்டையாய் இடிந்ததடி

நொந்த நெஞ்சு வெந்ததடி
எந்தன் மனம் பிஞ்சதடி
சொந்தமொன நினைத்த கிளி
சொல்லாமல் போனதடி

நெருப்பில் வெந்த இதயமதை
பொறுப்பின்றி விட்டுவிட்டால்
துருப்பிடித்த இரும்பாக புரையேடி
அறுத்துவிடும் உயிரினையே

புண்பட்ட இதயத்தின் தசைகளுக்கு
புத்துயிர் அளித்திடவே
பண்ணாலே மருந்திட்டேன்
பண்பட்ட நெஞ்சமது மேலும் பக்குவப்பட்டதடி

யார் கண்பட்டுப் போனதோ ? நீ
என் கைவிட்டுப் போனாயடி
தேரேரி உனையழைத்து
ஊர்கோலம் போக நினைத்திருந்தேன்

திருவோடுதனைக் கொடுத்து
தெருவினிலே எனை அலையவிட்டு
ஒருவருக்கும் தெரியாமல்
உருமாறிப் போனாயடி

குத்து விளக்கென நினைத்து - உனை
கும்பிட வந்தேனடி
குத்திக் கிழித்தென்னை
குருதியில் சாய்த்து விட்டாய்

செத்து மடிந்து விட நான்
வித்தில்லா செடியுமல்ல
உதிர்ந்து சருகாக நான்
ஊமத்தம் பூவுமல்ல

வேதனனக் குமுறலடி - இது என்
சோதனைக் காலமடி - நான் பிறருக்கு
போதனை செய்திருந்தேன்_ நீ எனக்கே
போதித்துப் போனாயடி

விளையாட்டுப் பிள்ளை என்னை
வலைபோட்டுப் பிடித்து
வாழ்கைச் சிறைக்குள் தள்ள
தலையாட்ட வைத்தாளடி என் அன்னை

தலையாட்டிப் பொம்மையாய்
தலை நீட்ட துணிந்த என்னை
எடைபார்த்து பணமில்லை என்று
தடைபோட்டுப் போனாளடி உன் அன்னை.

வொண்ணை திரண்டதென
உன்னைப் பார்த்த வேளையிதனில்
என்னை மறந்து மாலை சூட கனவு கண்டேன்
உன்னை தாலி கட்டும் முன்னே தாழி உடைந்தடி

தோழியாய் நீ வருவாய்
தோள் கொடுத்து எனை தூக்கிடுவாய் - உன்
வேலியாய் நானிருப்பேன் என நினைத்திருந்தேன்
காலியானதடி என் கணக்கு

பொறுக்கி எடுக்கும் போட்டிதனில் -என்னை
பொருத்தமில்லாதவன் என ஒதுக்கிவிட்டாய்
அர்த்தமற்ற உம் செயல்லால்
வருத்தமுற்று சொல்லுகிறேன்

பொருளில்லார்க்கு இல்லை இவ்வுலகம் என
பொருளுடை குறள் தந்த
பொன்னுரையை உனை
பொண்பார்க்க வந்ததால் உணர்ந்தேன்

குறள் அறிவு பெறவாவது
உறு துணையானதே - உன் அழைப்பு - இச்
சிறு உதவி கூட பெரிதாமே எனக்கு
பெருஞ்செல்வத்துடனே நீ வாழ்க பல்லாண்டு!

No comments: