அவனொரு காரையில்லா காட்டாறு
வேடை தனில் ஓய்திருப்பான்
வெள்ளம் வரும் போது பாய்ந்திருப்பான்
அவன் உள்ளம் ஒரு கரும்பாறை
அதன் உள்ளே உறைந்திருக்கும்
கருணை என்னும் சிறு தேரை
கொடுப்பதிலே அவன் மழை மேகம்
கொடுமை கண்டால் எரிமலையாய் அவன் தேகம்
கொதித்தெழும் கடலலையாய் அவன் வேகம்
சூரியப் பிழம்பாய் சுடும் அவன் விழிகள்
சூறாவளியாய் சுழலும் அவன் மூச்சு
சுடு தனல் கக்கும் அவன் பேச்சு
பெயருக்காக அவன் வாழ்ந்ததில்லை
ஊருக்காகவே அவன் வாழ்வு நிலை
யாருக்காகவும் அவன் வளைவதில்லை
நேர் வழி ஒன்றே அவன் பாதை - அதில்
ஏர் முனை போன்றே அவன் பணி- பெரும்
போர் களம் தானே அவன் பயணம்
நாளும் உழைப்பது அவன் உடல்
நாடு என்பது அவன் உயிர்
நல்லவை செய்வதே அவன் தொழில்
விண்ணொளியாய் அவன் முகம்
விடியலின் கதிராய் அவன் படை
வெற்றி முகடு நோக்கியே அவன் நடை
வீரம் ஒலித்திடும் அவன் முழாக்கம்
வீண் தளை ஒழித்திடும் அவன் இயக்கம்
விடுதலை அளித்திடும் அவன் முயற்சி
பழமைகள் போற்றிடும் அவன் பண்பு
புதிய பூக்கள் பூக்கும் அவன் உள்ளம்
புதுமைகள் புனையும் அவன் உலகம்
No comments:
Post a Comment