Tuesday, November 28, 2006

ஏற்றுக் கொள்.

நினைத்தது கிடைக்கவில்லையா?
கிடைத்ததை ஏற்றுக்கொள்ளடா
உன்னை மட்டும் கொண்டதல்ல உலகம்
உனைப் போல் உள்ளாரடா பலரும்


இடி தாங்கும் இதயம் இது
இந்த சிறு அடி கூடத் தாங்காதா?
வெடிகளுக்கு அஞ்சா நெஞ்சமிது
வேடிக்கைப் பட்டாசுக்கு அஞ்சிடுமா?

மழை காலத்தில் விதைத்தவன் தான்
விளைச்சலை காண்பானடா
அலை ஓய்ந்ததும் கடல் செல்ல நினைப்பவன்
கரையினிலே கரைவானடா
வாழ்க்கை என்பது போர்களம்- அங்கு
வாள் கை கொண்டு சென்றிடடா
வாழ்க்கை என்பது பேராட்டம் - அதை அதன்
வழியில் சென்று வென்றிடடா

வாழ்க்கை ஓர் இன்ப ரகசியம்
வஞ்சனை இல்லா ஆசையே அதன்
வாசலின் திறவுகோல்
வந்து பார் தெரியும்
வாழ்ந்து பார் புரியும்

வருத்தம் வரும் விரட்டியடி
வளங்களை நீ துரத்திப் பிடி
பொருத்தமில்லா கோபமதை தூக்கி எறி
பொற்காலம் உனதாகும் இது புதிய நெறி

நீ ஒரு சூரியன் இருளுக்கு பயப்படலாமா?
நீ ஒரு தீப் பொறிதீக்குச்சி தேடலாமா?
நீயே பொக்கிஷம் யாசகம் கேட்க்கலாமா?
நீயே மழை துளிதாகத்தில் தவிக்கலாமா?

கரும்பாய் இருந்தால் -உனை
எறும்புகள் கூட அரித்திடும் - நீ
இரும்பாய் இருந்திடு உலைகலன் கூட
உருக்கப் பயந்திடும்

சத்தியம் என்ற சட்டம் கொண்டு
சபைதனில் நீ முழங்கிடு
சகலமும் உன்னை
சரணடையும்

சமத்துவம் எனும்
சாலை வழிதனில் - நீ
சரியாய் நடந்திடு
சமுத்திரம் கூட
சட்டென உன் ஆணைக்கு
அடங்கிடும்

நாளை என்பதால்
நாழிகை காத்திருக்காது
நாட்கள் கழிவதால்
நல்லவை தானாய் நடக்காது

முன்னோக்கி நீ செல்
முயற்சி கை கொள்
முடிவு ஏதாயினும்
முழுமனதோடு ஏற்றுக் கொள்.

No comments: