Monday, November 27, 2006

எசமானர்களின் எச்சரிக்கை

நீதி செத்த உலகில்
நித்தம் நடக்குது கலகம்
சாதிப் பித்தம் பிடித்த மனிதன்
இரத்தம் குடிக்கும் மிருகம்.


சமயமென்ற போர்வையில்
சாமியார்கள் கூட்டம்
மதம் கொண்டு அலைகிறது
மனிதம் கொன்று மகிழ்கிறது.

தெய்வம் உண்டு என்றால் அதற்கு
தெரியாதோ; கடவுளின் கண்கள்
களவு போனதெங்கே யார்
அறிவாறோ?

ஆண்டவனை துணைகழைத்து
அறியாமை மனிதர்களை
அடிமையென விலைபேசுவதே
ஆன்மீக வழியாகிவிட்டது.

துறவிகள் எல்லாம்
துகிலுரிவதால்
திக்கற்று திசையற்று
திகிலுறைந்து மக்கள்

கோலோச்சும் அரசுகள்
கொடிதேரணத்தோடு
கொள்கைகளைப் பறக்கவிட்டு
கொடுமைகளை விதைப்பதென்ன?

அடுக்கடுக்காய்
அடக்கு முறை
ஒடுக்கு முறை - இது
ஆளவந்தார் சட்டமுறை

எதிர் குரல் கொடுக்க
எவருமில்லை
ஏனென்று கேட்ப்பவர்க்கு
உயிருமில்லை

துப்பாக்கி ரவைகளை
துப்பி துப்பி தப்பாக
தூயவர்களை கொன்று
துடிக்கவிட்டு இரசிக்கின்றார்

ஆணவத்தின் ஆட்சியிலே
அப்பாவி மனிதர்கள்
தப்பிக்க வழியில்லையா?
தடுப்பதற்க்கு ஆளில்லையா?

சப்பாணி நடைபோட்டு
சாட்சிகளைப் பழிபோடு
தப்பான தீர்ப்புச் சொல்லத்தான் இங்கு
சட்டம் கருப்புச் சட்டை போட்டுக் காத்திருக்கிறது

சனநாயக நாட்டில்
மனு நீதி வேண்டிய
சனங்களுக்கு எல்லாம்
பணநீதியே பரிசளிக்கப்படுகிறது

அநீதிகளுக்கெல்லாம்
அளவுக்குத் தக்கபடி
அன்பளிப்பும் வெகுமதியும்
அறிவிக்கப் படுகிறது

பார்வை குறையுள்ள
பாதிக் குருடர்கள்
பதவி நாற்காலிகளில்
பாவமாய் நாற்காலிகளும் நாங்களும்

பல்லக்குத் தூக்கிகளாகிவிட்ட
பத்திரிக்கைகளால்
பக்கங்களை மட்டுமே
பத்திகளால் நிரப்பமுடிகிறது

எழுதுகோல் புரட்சிகள்
எல்லாம் ஏட்டுக்குள் மட்டுமே
எதுகை மோனை வார்த்தை விளையாட்டுகள்
எதற்குமே உதவுவதில்லை

வெற்றி முரசு கொட்டி
வெண்சமர கவரி வீசி
வேள்ப்படை வாள்ப்படை கொண்ட - முடி
வேந்தரைப் போல் மக்களை மதியாது

கடமை மறந்து கண்ணியமிலந்து
கை கொட்டி சிரித்து
களிப்புற்றிருக்கும்
கபட நடக அரசியல்வாதிகளே

வெற்று விளம்பரங்களுக்காக
சற்றும் சாத்தியமில்லாத
இற்றுப் போகும் திட்டங்களை இயற்றி
உற்றுநோக்குகின்ற மக்களை ஊனமாக்காதீர்

உலகம் விழிப்புற்று
உள்ளம் தெளிவு பெற்று
உண்மை நிலையுணர்ந்து -ஒரு நாள்
உரிமைப் போர் வெடிக்கும்

எரிமலையின் சீற்றத்தோடு
எல்லை மீறி வெடித்தெழும்
எம் மக்கள் சக்தியின் முன் - உன்
ஏமாற்று வேசங்கள் எரிந்து சாம்பலாகும்

அச்சமாய் இருக்கிறதா?
எச்சிலை குப்பைகளே -உங்கள்
எதேச்சிகார போக்குக்கு எதிரான எங்கள்
எச்சரிக்கைக் குரல் இது

மக்களை மதித்தால்
மணிமகுடம் உங்கள் தலையில்
மறந்தால் மண்ணின் மடியில் உம் தலை.

No comments: