Monday, October 05, 2020

தற்காத்தலே தகவுடைமை

 

தற்காத்தலே தகவுடைமை!

பொங்கிப் பொழிந்த கார் மழையால்
பொங்கி வழியுது பாறையில் பாலருவி
தேங்கிய சுனை நீரில் வெம்மை தணிக்க
ஏங்கிய இளமை எட்டித் தாவுது!

எல்லையில்லாத் துணிவே
எமனாகலாம் எச்சரிக்கை!
களிப்புடன் குளிக்க வந்த இடமே
காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

வழுக்குப் பாறை நீரோட்டம்
வாழ்வை வழிமாற்றிடும் – உடன்
வந்த நட்புகளுக்கு வழக்கானால்
வாழ்வே போராட்டம் ஆகிடும்!

நீராடல் ஒரு கலை நீ நின்றாடு!
நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
நீ விழிப்போடு களித்தாடு விழி
நீர் வழிய வினை செய்யல் ஆகாது!

நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
நிலையுயர்த்தும் இளமை அலை
நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு!

தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
தான் உனை நம்பியுண்டு – பயமறியாத்
தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடைமை
தவறில்லாக் குறள் நெறி கொள் வாழ்வை வெல்!

நன்றி:

படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள் :October 01, 2020 

'நீராடல் ஒரு கலையே! அதனை விழிப்போடு களித்தாடு! தற்காத்தலே தகவுடைமை; குறள் நெறி கொள்! வாழ்வை வெல்! என்று பயமறியா இளங்கன்றுக்கு நயமாக நல்லுரை நவின்றிருக்கும்' 

திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.மேகலா இராமமூர்த்தி 

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

 

No comments: