Saturday, November 03, 2018

உறக்கப் போர்வையை உதரி எறி


 
உதய சூரியன் உறக்கம் கலைத்தும்
உதரி எறியாத போர்வைக்குள் நீ
உள்ளம் மூடிய உணர்வற்ற
உறக்க நிலையில்

உனக்கு எப்படி விடியும் ?
உனது பகல்கள்
உன்னை விட்டு நீ
உணர முடியாத தொலைவில்

தொலை தூரம் சென்றது
தொல்லை என கலைந்த
கனவுகளிக் காட்சி அலைகளுக்குள் நீ 
கண்ணாமூச்சியாடுகிறாய்

சோமபல் மடங்களில் உனது
சொர்க்கம் சுகமடைகிறது
சாறு உறுஞ்சும் தத்துப் பூச்சியாய் நீ
சோறு போட தாயும் தந்தையும்

சாம்பல் பொடிகளை
சலனமின்றி
சந்தன சாந்தென நீ
சிந்தையின் சிந்தனையில் பூசிக்கொண்டாய்

சிறு தீப்பொறி
பெருங் காடுகளை கூட
பற்றி எரித்திருக்கலாம் நீ
பனிகட்டியானால் அவை என்ன செய்யும்?

பாதையோ கரடு முரடு உன்
பார்வையோ நிறக்குருடு
பயணம் தொடர்வது இனி
பயணற்றதென பலர் சொல்வார்

பரிசு பெரும் போட்டி ஓட்டத்தில்
பந்தைய குதிரைகளுக்கு
பாய்வதில் மட்டுமே
பலமான நம்பிக்கை இருக்க வேண்டும்

உலகில் உயர்தவை அணைத்தும்
உன்னால் தொடமுடியும்
தோல்விகள் தொடர்களை உனது
தோல்களில் தாங்கி வெற்றி நடை போடு

கம்பளங்கள் விரித்த
கவின்மிகு களங்களில் மட்டும் உன்
கால்கள் பயணிக்குமானால்
காலம் காத்திருக்காது

கற்களும் முற்களும்
கால்கள் மிதிக்கும் போது மட்டுமே
காயப்படுத்துகின்றன நீ
கவனமாய் கடந்து பார்

கை குலுக்க காட்டுப் பூக்களை
கொய்து கொட்டித் தூவி
காத்திருக்கும் நீ
கண்விழித்து காளையென பவனி வருவாயென

சாம்பல் பொடிகளை
சற்றே துடைத்து எறி
சன்ன தீப்பொறியை
சின்ன இதயத்தில் உதயமாக்கு

சிறை கொண்ட
உறை பானிக் கட்டிகள்
கரையற்ற காட்டாற்று ஓடையாய் உன்
கறைபட்ட இதயத்தை கழுவி துய்மையாக்கும்

கனவிகள் கை விலங்கிடப்பட்டு
நனவு உலைக்கலத்தில்
நகைகள் செய்ய நல்ல முறையில்
நசுக்கப்படும்

உறக்கப் போர்வையின்
உயிர் முடிச்சு
உருவி அவிழ்க்கப்பட்டு
உணர்ச்சி மூச்சு உன்னுள்
உட்செலுத்தப்படும்

No comments: