வானவில்லின் எட்டாவது வண்ணம்
தொட்டுவிட முடியா தொலைவில்
தொட்டுப் பார்க்கத் தூண்டும் அழகில்
எட்டா உயரத்தில் உனை காணும் போதெல்லாம்
எட்டி எட்டி தாவுது என்மனம் குழந்தையாக
கொட்டும் தூரல் மழைத் துளியில்
வெட்டும் சுடர் கதிர் ஒளியில்
வெட்டவெளி வானின் நெற்றியில் அரை
வட்டப் பொட்டு இட்டதாரோ?
ஏழுவண்ண எல்லை கொண்ட உனக்கு- ஏன்
எட்டாம் வண்ணம் இருக்க கூடாதோ?
எண்ணி நான் எடுத்தேன் எழில் வண்ண தூரிகையை
எண்ணச் சிதறல்கள் உன் ஒளிச் சிதறல்கள் போலவே
வண்ண வண்ண மின்னலாய் பின்னல் வினாக்கள் என்னுள்
ஏழுவண்ண எழிலுக்கு என்ன வண்ணம் எட்டாவதாய் தீட்டுவது?
சின்ன சின்ன சிந்தனைகள் பல வண்ண கலவையாக சிறகை விரித்தது
பால்வண்ணமா? இல்லை பளிங்கு வண்ணமா?
பல பல வாத விவாதங்கள் பட்டிமன்றமாய்
பல்லாங்குழியாடிக் கொண்டே பயணிக்கிறது
எங்கெங்கிருந்தோ எதிர்ப்புக் குரல்கள் எல்லாகுரலும்
ஏகக்குரலாய் எல்லா வண்ணமும் என் கட்சியின் சின்னம் என
என்னழகு வானவில்லே என்ன செய்ய?
எட்டாம் வண்ணம் ஏன் உனக்கு?
என்றும் நீ ஏழுவண்ண எழிலோடு
எமக்கு எட்டாத உயரத்திலே இருந்துவிடு!
பொதிகை தொலைக்காட்சியில் 05-05-2018 வாசிக்கப் பட்ட எனது கவிதை
1 comment:
அருமை...
Post a Comment