Monday, February 25, 2019

தாயாரை காணவில்லை




நன்றி-http://www.vallamai.com/


தாயாரை காணவில்லை
தந்தையார் யார் என்று தெரியவில்லை
வாயாரச்  சொல்லியழ வழியுமில்லை 
நாயாக பிறந்துவிட்டோம் நடுத்தெருவில் கிடக்கின்றோம் 

ஓயாமல் தேடி அலைந்து திரிந்து விட்டோம்
ஒரு வழியும் பிறக்கவில்லை 
ஒருவரையும் காணத்தான் முடியவில்லை 
ஓரமாய் படுத்து விட்டோம் 

பசியடங்கா எங்கள் பாழ்(ல்) வயிறுப்
பசியாற்ற எங்காவது கால் வயிற்றுக் கஞ்சி  தேடி
திசை தெறியமல் திரியும் எம் அன்னை
திரும்பி வருவாளோ மாட்டாளோ யார் அறிவார்?

தறிகெட்டு ஒடித்திரியும்  வண்டியின்  சக்கரத்திலோ
குறிவைத்து சுடுகின்ற குறவன் துப்பாக்கி குண்டிலோ
பொறிவைத்து பிடிக்கும் ஊர் சேவகன் கயிற்றிலோ
வெறி விலங்கு கடியிலோ சிக்காம சீக்கிரம் வந்திட வேணும் சாமி

மண்ணில் மானிடராய் பிறந்திருந்தால் 
மடியிலிட்டு தாலாட்ட உற்றார் உறவினர்கள் உண்டு 
மண்தரையில் கிடக்கின்ற எங்களை 
மனமிறங்கி மனைக்கு அழைக்க யாருண்டு

நாயாக நாங்கள் இருந்தாலும் நட்புடனே நல்லோர் சொன்ன
நல்வழியில் தான் சென்றிடுவோம் - நாளும் வாலாட்டி
நன்றியுடன் தான் காலடியில்  காத்துக்கிடப்போம்
நல்லோரே நாங்களும் வாழ நல்வழிகாட்டி நலங்காப்பீர்


------------------------------------------------------------------

செம்பவள  கண்ணுகளா ! செல்லமணி குட்டிகளா ! 
செம்மண் சாலையிலே சேர்த்தணைத்து விளையாடும்  நீங்களெல்லாம்
செம்பருதி சுடர் கதிரின் புது ஒளியோ
செழுமை மிகு நிலமகளின் உயிர்துடிப்போ

மந்தை மண்ணினிலே கிடக்கும் நமக்கு
தந்தை தாய் அருகில் இல்லை அதனாலே
சந்தையில் விலை கூவி விற்றிடுவார்  என
சிந்தையிலே என்ன எண்ணில சிந்தனையோ

ஒருதாய்பிள்ளைகள் நாம் எல்லோரும்
ஒற்றுமையின் பலத்தாலே கட்டுண்டோம்
ஒரு சிறு பொழுது விலகி பிரிந்தாலும்  அஃது
ஒரு பெரும் துயர் அதை தாங்கமாட்டோம்

எல்லோருக்கும் எங்களை பிடிக்கும்
என்றாலும் சில கற்கள் எம்மை வந்து அடிக்கும்
எங்களுக்கும் வாழ்வு உண்டு நாளை
எல்லோருக்கும் அது ஓரு நல்வேளை

தூக்கிப்போடு துன்பத்தை துள்ளி ஆடு இன்பத்தில்
இரவும் பகலும் இணைந்தே ஒரு நாளாகும் 
இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்
இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்

தரையில் கிடக்கின்ற எங்களுக்கும்
தன்னம்பிக்கை கொஞ்சம் உண்டு
தலைநிமிர்வோம் தடை தாண்டி
தலைமையேற்போம் தகுதிகளோடே



No comments: