Monday, February 25, 2019

தனியொருவன்

நன்றி-http://www.vallamai.com


இருபெரு கரு உயர்நீல(ள) வரையின்
இரு கரைமருங்கிடை விரிதிரை புனல் நதியில்
கருமை இருள் கலைந்த காலை வேளையில்
கருமை மெய் கலந்த காட்டரசனின் களிப்புறு குளியல்
இறைவன் அளித்த இயற்கைச் சீதனங்கள்
இருபெரும் பொன் வெள்ளித் தந்தங்கள்
இருப்பதனால் வேழம் அவன் இருந்தாலும்
இறந்தாலும் இருக்கிறது பொன் ஆயிரம்
தும்பிக்கைதான் அவன் நம்பிக்கை – அதில்
தூக்கிச் சுமந்தெறிந்த பாரச்சுமைகள் ஏராளம்
தன்னந்தனி திரிந்தாலும் நன்னம்பிக்கை என்னும்
தன்னம்பிக்கையால் தாக்கியழித்த தடைகள் எண்ணிலா
நிலம் அதிரும் அவன் நடந்தால்
நீர் சிதறும் அவன் அலைந்தால் – நிழல்வனம்
நடுங்கும் அவன் சினந்தால் – ஆயினும் பாகனின்
நில் என்ற சொல்லுக்குப் பணிதலில் மிளிரும் அவன் குணம்
வம்புடை வன்முறை மானுடம் தான்வாழ யானை
வழித்தடத்தையும் வாழ்விடத்தையும் வழிமறித்தே
வாரிச்சுருட்டி வாயிலிட்டுவிட்டு அன்புடையவனை
வம்பன் கொம்பன் என வசைபாடுது
நாளைய சந்ததியின் நல்வளங்களைச் சூறையாட
நாடெல்லாம் திரியும் மணல்கொள்ளை மனிதரால்
நாதியற்றுப் போன நதிகளின் மரணத்திற்கு
நீதிகேட்டு வந்த நீ தனியொருவன்!
நன்றி -http://www.vallamai.com/?p=90159
--------------------------------------------------------------------------------------------------------------
படக்கவிதைப் போட்டி 195-இன் முடிவுகள்
Wednesday, January 16, 2019, 22:00
மேகலா இராமமூர்த்தி
http://www.vallamai.com/?p=90159
இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் மதிப்புடைய வேழத்தின் வழித்தடங்களையும் வாழ்விடங்களையும் வாரிச்சுருட்டி வாயில் போட்டுக்கொண்ட மானுடம், நாதியற்றுப்போன நதிகளின் மரணத்துக்கு நீதிகேட்டுவந்த தனியொருவனான அவனை வம்பனென்றும் கொம்பனென்றும் வசைபாடுவது முறையோ?” என்று வேழத்தின் அவலநிலையினை ஆழமாய்ப் பேசும் இக்கவிதையை யாத்த திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------

No comments: