Saturday, January 12, 2019

என் பாட்டன் பாரதி





என் பாட்டன் பாரதி
வாய்ச்சொல் வீணரிடை
வாள்சொற் சுழற்றிய வீர அபிமன்யு
வசன கவிதைக்கு வித்திட்ட கவியுழவன்
வளர்தமிழுக்கு பா புரவி பூட்டி தேரோட்டிய கவிச்சாரதி

பெண்ணியத்தின் முன்னுரிமைக் காவலன்
கண்ணியத்தில் முறை தவறா நாயகன்
கண்ணனவனின் முத்தமிழ் சேவகன்
கண்ணம்மாவின் முழுமுதற் காதலன்

அச்சம் கொன்று இச்சகத்தை வென்ற ஞானசுடரொளி
உச்சிமீது இடிந்து வீழும் வானையும் துச்சமென
உள்ளங்கையில் பிடித்து பொடித்து வீசும் இரசவாதி
உயிர் புலன்களை உசுப்பி உயிர்பிக்கும் ஊழித்தீ

சாதிக் கொடுமைகளை சாடிய நீதி தேவன்
சமய தீமை சுட்டு வீர கானம் பாடிய என் தேசக் கவி
சிந்தனை ஒன்றுற விடுதலை வேண்டி கண்ட சந்திர சூரியன்
சின்ன குழந்தைக்கும் அறசீற்றம் போதித்த அக்கினி குஞ்சு

வையம் விழிப்புற உதித்த விடியலின் எழுகதிர்
ஐய்யம் தீர்த்து அறிவு அமுதூட்டிய ஆழிப் பெருங்கடல்
பொய்மையின்  உயிர் குடிக்க வந்த ஊழிப் பெருங்காற்று
மெய்மையின் மேன்மை தாங்கிய புதுபுனல் ஊற்று

எட்டையபுரத்து சுட்டெரிக்கும் ரௌத்திரக் கனல்
எட்டாதனவற்றையும் எட்டிதொட்ட கெட்டிக்காரன்
வெட்டிப் பேச்சு வீணரை எட்டி உதைத்து
வெட்டிச் சாய்க்கும் பாட்டுவாள்

சுட்டும் விழிச் சுடர் கொண்டு மடமை கொழுத்திச்
சுட்டு மாட்சிமையுரைத்த  மானுடக் கடவுள்
வெட்டும் மின்னலாய் மூடத் தனத்தை மோதி
முட்டிச் சாய்த்த முன்டாசு இடிமுழக்கம்

இரும்பைக் காய்ச்சி யந்திரங்கள் வகுத்திட சொன்ன இயந்திரன்
வரும் காலனை காலருகே வா என உதைத்த எக்காலகவிஞன்
ஒருவனுக்கு உணவில்லை எனில் உலகழிக்கும் மீசைக்காரன்
பாருக்குள் நல்ல பாரதத்தின் பாட்டுடை தலைவன் என் பாட்டன் பாரதி
                                                                                                            சு.பாஸ்கரன் 13/12/2018

No comments: