Thursday, February 23, 2012

இணைந்த மனங்கள்


 கரும்பு சாறு பிழிந்து அதில்
அரும்பு தேன்துளி அள்ளி கலந்த
விரும்பு க(ன்/ண்)னியவளின்
குறும்பு கவிதை மொழி
மருத மாங்குயிலிசையோ ?

குடகு மலை குளிர் நீரோடையோ ?
குற்றால மலைச் சாரல் சூடிய
வற்றாத வான் சுரந்த புனலாடையோ ?
குமரியவள் கொஞ்சும் பேரழகு
கூர் வாளாய் நெஞ்சின் வேரருகில்

குங்குமம் குழைத்து பூசிய
குவிந்த கோவை இதழ்களில் என்றும்
குன்றா சிவப்போடு குறு நகை பூத்த
குடும்ப விளக்கவள்
குறையில்லா கற்புடை சுடர் நெருப்பு

கூடல் நதி நடையாளின்
ஆடல் கொடியிடையழகும்
மடல் அவில் வாழை தண்டு கால் அழகும் கண்டு
அடலேறு அரிமாக்கள்
கடல் மீறும் பேரலையாய்

கரை கிடக்கும் கட்டு மரந்தனை
நுரை பொங்கும் பெருந்திரை சமுத்திரத்தில்
விரைந்தோட்டி வலைநிரை கயல் வாரி வரும்
திரைகடல்லோடி தேடி எடுத்த
நிறை ஒளி நீல முத்தோ அவள்

பிறை மதி தெப்பத்து மீனவன் வலை
சிறைபட்ட வலம்புரி வெண்சங்கு நிறத்தாள்
இறைத்தெரிந்த சில்லரை காசு போல் சிரித்து
பறையரை போர்முனை முன் பாயும் மறவர் தம்
பாறை மனங்களையும் பார்வையால் சூறையாடிவிட்டாள்

செறுபகைச் சமர்க்களத்தில் சேணை முன்னவனின்
உருவிய உறைவாள் உருட்டிய தலைகள்
உயரக் குவிந்து உதிர்த்த செங்குருதி சேற்றில்
ஊண் தோடியலையும் கழுகுகளாய்
ஊதய நிலவை உரிமையாயக்கிட காளையர் கூட்டம்

இருமலர் விழியுடை
இதழ் விரி பூங்கொடியிடையாளை
இதமான தருணம் பார்த்து
இழுத்து செல்ல
இரவும் பகலும் இமை மூடாது

காளையான் கனவுகளை
காற்று வழி செய்தியாய் கோட்டு
காற்றலை மீறிய மின்னலை வேகத்தில்
கருமணல் கான் வெளியும்
கடுமலை கரட்டு வழியும் தாண்டி தலைவனவன்

பெருந்தோல் தடக்கை கூர்வாள்
சுழற்றும் பேரழகு ஆணழகன்
இரு புரவி இணைத்து பூட்டிய
தேர்தனில்

அரும்பு மீசை அரிமா அவன்
குறும்பு பார்வை வீசி
திரும்பிய போது
திருவாுர் தேர்ச்சிலையாய்
தெருமுனை தனில் திருமகள்

நீருறை நிறை குடந்தனை
சீரிடை சிவக்க தாங்கி
நேர்நடை கால்கள் நெறியோடு செல்ல
கூர்கயல் விழி நிலம் நோக்க
குறுக்கு சலையில் நேர் எதிர்
பொன்மகள் வந்தாள்

திண் தோல் புரவி
திமிரிக் கணைத்தே தாவிக் குதித்தது
திறனுடை மறவன் விசையோடு அடக்கி
திருமகள் முன்னே திமிராய் நின்றான்

வீதிதனில் யாருமில்லை
வீரன் கையில் சாதி முல்லை
விழி நான்கும் விலகவில்லை
எடுத்தான் காமன் கரும்பு வில்லை தோடுத்தான் காதல் மலர் அம்பை
வீழ்ந்த இதயங்கள் மீண்டு எழவே இல்லை

கார் குழல் கவிதையின்
கருவிழி மின்னலையும்
போர் திறன் காளையின்
கூர் வாள் பார்வையும்
ஓர் நிலையாகி ஓளி காதல் மலர்ந்தது

கைதாங்கிய காந்தமதி க(ன்)னியவளை
கண்ணே என்றான் காளை
காரிகையோ கண்ணாலா
காவல் இனி நீ தான் எனக்கென்றாள்
கவலை உனக்கேன் காலம் முழுதும் காப்பேன் என்றான்

இன்பப் பனி மழையில் நனைந்த
இளநங்கை இதயம் திறந்து
இனியவனே இனி நீ தான் நான் என்றாள்
இதயங்கள் இரண்டும் இணைந்தன ஒன்றாய்
இனி எவர் வந்து பிரிப்பார் இரண்டாய் ?

தனியாத காதல் தாகம்
தடையில்லா நதியாய் தாவியது
தடுப்பாதற்கு இனி யாருமில்லை
தாமரை பூங்கொடி தனக்கென
தரணியெங்கும் முரசறைந்தான் மறதமிழன்

தாரகையை தளிர் கரம்பிடித்து
தாரமாய்யாக்கிட
தவறாது பரிசம் தந்து
தன்னவளின் பெற்றோரிடம்
தாழ்மையுடன் வேண்டி  நின்றான்

உத்தரவு பெற்றே
உயிரில் உறைந்தவளைஉரிமையாக்கிட
உலகறிய நாள் குறித்து
உறவுகளை உடனழைத்து
ஊரெல்லாம் நேர் சென்றழைத்தான்

உறவும் நட்பும் உள்ளம் நிறைய
உடன் வந்து உளமாற வாழ்த்த
உதய வேளையில்
உள்ளங்கள் போல மாலைகள் மாறின

கண்மணியவளை கனமும் பிரியாது
மண்ணும் விண்ணும் உள்ளவரை மறவேன்
மனைவிதனை என மங்கள இசை முழங்க
தமிழ் மறை சாட்சியக தங்க தாலி கட்டி
தன் மனம் தந்தான் தலைவனவன்

No comments: