Tuesday, October 22, 2019

அன்பு செய்வோமா


கூடிவாழ்ந்த உறவுகளின்
கூட்டுத் தொகை சில கோடி
கூன்முதுகு குனிந்து சுமந்த சுமைகளின்
கூட்டுநிறை பல கோடி – ஆயினும்
கூர் மழுங்கிய ஏர்க் கொழுமுனை இது
கூர்மை மங்கிய விழிகளின் பார்வையோடு
கூடிழந்த பறவையாக இன்று குடியிருக்கக்
கூடு தேடும் இடமோ தெருக்கோடி!
ஆலமரம் விழுதிறங்கித் தோப்பாச்சு
ஆன அடிமரம் தான் ஆதரவு இன்றித் தனியாச்சு!
ஆயிரம் உறவுகள் தாங்கிய தோள்களும் கால்களும்
ஆதரவு தேடி ஏதிலியாக எங்கோ போகிறது!
ஆண்டவன் கூட அறிவிப்பே செய்கின்றான்
அவனைப் போலவே அன்பு செய்யச் சொல்லி
ஆனலும் அன்பான ஆளைத்தான் காணவில்லை –எல்லா
அம்மா அப்பாவுக்கும் இதுதான் கடைசியா?
அன்னைக்கும் தந்தைக்கும் ஆதரவளிப்போமா- நமது
ஆருயிர் தானே அவர்கள் அதை நாம் அறிவோமா?
அமுதூட்டி அகிலம் காட்டிய அவர்களுக்குக் கொஞ்சம்
அன்பு செய்வோமா அதை அன்புடன் செய்வோமா?
இளமை மட்டுமே நிலையல்ல
இனி முதுமை என்பது முடிவல்ல
இதயம் அன்பால் நிறைந்தால்
இன்பம் தானே விரியும் எங்கும்!


படக்கவிதைப் போட்டி 225-இன் முடிவுகள் October 1, 2019


’அன்பின் வழியது உயிர்நிலை’ என்றான் வள்ளுவன். ’நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்’ என்றான் ஆண்டவன். ஆதலால் மூப்பினால் தளர்வுற்றிருக்கும் முதிய பெற்றோரை மதித்துக் காத்தல் பிள்ளைகள் கடனென அறிந்து அன்புகாட்டினால் இன்பம் எங்கும் விரியும் என்று நயமாய் நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். மேகலா இராமமூர்த்தி

No comments: