Monday, November 04, 2019

அடிமை நீயா? நானா?


கட்டியவளை விட கனப்பொழுதும் துணையாய்
கண்மூடும் முன்னும் கண்விழித்த பின்னும்
காதோடு காதாக காதலுடன் கனிவாக
காற்றுக்கூட நுழையா வண்ணம் எனை கட்டிப்போட்டவள்

மணிக்கணக்காய் அவளோடு கொஞ்சிக் கிடக்கின்றேன்
மடியிலும் மார்பிலும் தவழ்ந்து தழுவிக் கிடக்கின்றாள்
மாயப்பேய்யவள் என்னை மயக்கியே கொல்கிறாள்
மையல் கொண்ட நானும் மதியிழந்து தவிக்கிறேன்

செல்லுமிடம் எங்கும் உடன் தொற்றி வந்து
செல்லச் சிணுங்களில் என்னை செயலிழக்கச் செய்கிறாள்
செய்மதியூடே சேதி தந்து என் சோதியில் கலந்தாள்
செய்யும் செயல்யாவினிலும்  நுழைந்தே சேட்டை செய்கின்றாள்

ஆணையிட்டால் ஆடுவாள் அடிமையவள்
அழுத்திப்பாடச் சொன்னால் பாடுவாள்
அடுத்த வீட்டு நாடகத்தை அஞ்சாமல் நேரலையாக்குவாள்
அலுத்துப்பேய் அணைத்துவிட்டால் வாடுவாள்

தழுவுதல் ஒரு சுகம் அவள் மெய் கை
தடவுதல் ஒரு சுகம் நேரம் திண்ணும்
தேவதையவள் இருந்தாலும் இயங்காது இறந்தாலும்
தவிக்கிறது தனிமையில் தடுமாறும் மனம்

திசை எட்டும் திரையில் கிட்டும்
விசைமீது விரல் பட்டால் விரியும் உலகம் இதில்
தீதும் நன்றும் வெளியில் இல்லை  திறன் மிகு
செல்லிட பேசியே அடிமை நீயா? நானா? நம்மில் யாரோ?


No comments: