Monday, November 04, 2019

சாரதி


பரந்த நீலக்கடலின் ஓரத்தில்
பாயும் புரவியின் வேகத்தில்
விரிந்த கரை மணல் திடலில்
விரைந்தோடுதே வாழ்வின் சாகசம்

கடலாட வருவோரை, காலார நடப்போரை
கவர்ந்திடவே காற்றாகப் பறந்திடும்
கரையோர குதிரைகள்- வாடிக்கை
காணாமல் போனாலும் காட்டுமே வேடிக்கை


குட்டிக் குழந்தை முதல் குடுகுடு கிழவர் வரை
குதிரையில் ஏற்றி குதுகலமூட்டும் வித்தைக்காரன்
கூட்டம் தேடி ஓடும் நேரத்தில் வாழ்வை வெறுத்து
கடலில் மாய வருவோர் காக்கும் காவல் வீரன்

உப்புக் காற்றின் ஊர்வலம் வரும்
உப்பரிகையின் தேசிங்கு ராசா- இவன்
ஊர்சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்கு
உற்சாகமாக பரியேற்றம் காட்டும் பாமர சாரதி

வரும் போகும் விரிகடல் அலை போலே
வந்து போகும் வாடிக்கையர் தரும் வருவாயில்
வயிறு வளர்க்கும் வாழ்கைக்கு தான் வறுமை  
வற்றாத மகிழ்ச்சி தான் மனதுக்குள் என்றும்

தள்ளிப்போடு துன்பத்தின் வலியை
துள்ளியோடு வெள்ளி மீனாக புது நம்பிக்கை விளையும்
தூங்காத இரவுகள் இனி நீங்கிவிடும்
நீங்காத துயரங்கள் இனி தூர விலகிவிடும்

No comments: