Wednesday, October 13, 2021

கடலோர காற்று

 கடலோர காற்று கவி பாடென்று சொல்லுது

கரை தாலாட்டும் அலையோ கைநீட்டி செல்லுது

கண்கண்ட காட்சிகள் என் நெஞ்சோடு பேசுது

கனவின்று நனவானது காத்திருத்தல் நலமானது

 

நானுமோர் குழந்தை யானேன்

நாளுமோர் புதிய ஞானம் பருகிப்‌‌‌ போவேன்

நாளையோர் புதிய உதயம் காணுவேன்

டக்கு மோர் எழுச்சி நடந்திட்டால் மகிழுவேன்

 

ஈரக் காற்று இன்னிசைக் கோர் ஊற்று

ஈதல் ஒன்றே  இனிய  ‌‌‌‌‌‌‌‌‌வாழ்வின்  உயிர்ப்பு

ஈன்ற தாயின் மடியாக இயற்கைக் தாயின் நீர்க்கரை

ஈடில்லா இன்பம் கோடி தேடி வந்த சுவரக்கம்

 

வான் புள்ளினங்கள் வரிசையாய் வலசை செல்லும்

வண்‌‌‌ணக் கிளிஞ்சல்கள் வாரிச்சுருண்டு வரும்

வாரிக் கடல் அலையினிலே ஏறி மிதந்து வரும் அதன்

வருகையும் புறப்பாடும் ஓர் ஒழுங்கு குழையா நிலையாகும்

 

துறுதுறு சிறுசிறுநண்டுகள்  குருகுரு நீர்மணலில்

விறுவிறுவென  விரைந்து குழி தோண்டும்

சரசரவென இரைந்து வரும் பெருந் திரையதை

பரபரவென கரைத்தே சலசலவென களிகொள்ளும்

 

புல்வெளிப் பனித்துளி எழில் பருகிய என் விழியால்

புனல் வெளியின்  புதுமை கண்டேன்

புதிதான பூவுலகம் விதவிதமாய் விரியக் கண்டேன்

புன்னகையாய் உவகை கொண்டேன்

 

கண்ணெட்டா கடுந் தொலைவு கடல் வெளியில்

கட்டுமர மிதவையிலே கழிவழி கைவழி வலை வி(ரி/தை)க்கும்

கடலுழவன் செம்படவன் நிறை குறையா திரை

கயல் திரவியம் சேர்த்து நலமுறவே கரை வர வேண்‌‌‌டும்

 07-10-2021

யாழ். பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679

basgee@gmail.com
noyyal.blogspot.in

  

Friday, October 23, 2020

முதுமை

 






ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
ஆடல் வல்லான் ஆலய வாசலில்
அடுத்த வேளைச் சோற்றுக்கு
அடுத்தவர் கையை நோக்கும் அவலம்!

நீறு அணிந்த பிறை நெற்றி
நீர்த் திரை மறைக்கும் சிறு விழிகள்
நிறம் கருத்த நெடு மேனி
வரம் வேண்டித் தவம் கிடக்கிறது!

பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி
பெற்றவரை விட்டு விட்டுத் தனம்
பெறப் பரதேசம் போனதனால்
பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்!

உற்ற துணை யாரும் இல்லை
உறுதுணையாக வரும்
உறவுகள் ஏதுமில்லை – புது
உறவு உருவானது புண்ணிய பூமியில்!

முதுமையின் முடியாமையால்
முயல்வதற்கு இயலாமையால்
மூவரும் மூலவரை நோக்கி
முக்தி வேண்டி பக்தி செய்கிறார்!

சங்கொலி முழங்கிச் 
சங்கடங்கள் தீர வேண்டுகிறார்
சங்கரனே சற்று இரங்கிடு!
சங்குப்பால் குடித்தவர்கள் 
செவியில் இதைச் சேர்த்திடு!

நன்றி

படக்கவிதைப் போட்டி 280

Monday, October 05, 2020

தற்காத்தலே தகவுடைமை

 

தற்காத்தலே தகவுடைமை!

பொங்கிப் பொழிந்த கார் மழையால்
பொங்கி வழியுது பாறையில் பாலருவி
தேங்கிய சுனை நீரில் வெம்மை தணிக்க
ஏங்கிய இளமை எட்டித் தாவுது!

எல்லையில்லாத் துணிவே
எமனாகலாம் எச்சரிக்கை!
களிப்புடன் குளிக்க வந்த இடமே
காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

வழுக்குப் பாறை நீரோட்டம்
வாழ்வை வழிமாற்றிடும் – உடன்
வந்த நட்புகளுக்கு வழக்கானால்
வாழ்வே போராட்டம் ஆகிடும்!

நீராடல் ஒரு கலை நீ நின்றாடு!
நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
நீ விழிப்போடு களித்தாடு விழி
நீர் வழிய வினை செய்யல் ஆகாது!

நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
நிலையுயர்த்தும் இளமை அலை
நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு!

தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
தான் உனை நம்பியுண்டு – பயமறியாத்
தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடைமை
தவறில்லாக் குறள் நெறி கொள் வாழ்வை வெல்!

நன்றி:

படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள் :October 01, 2020 

'நீராடல் ஒரு கலையே! அதனை விழிப்போடு களித்தாடு! தற்காத்தலே தகவுடைமை; குறள் நெறி கொள்! வாழ்வை வெல்! என்று பயமறியா இளங்கன்றுக்கு நயமாக நல்லுரை நவின்றிருக்கும்' 

திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.மேகலா இராமமூர்த்தி 

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

 

Wednesday, March 25, 2020

கொரான கொள்ளை நோய்

எட்டுத் திக்கும் பரவ துடிக்கிறது கொரான
தொட்டால் தொற்றிடும் பட்டால் பற்றிடும்
விட்டு விலகி தனித்தனியாய் நாமெல்லாம்
வீட்டுக்குள்ளே தனித்திருந்து விரட்டிடுவோம்

 கை சுத்தம் மெய் சுத்தம் தேவை இக்கணம்
ஐயம் வந்தால் அச்சமின்றி உடன்
அனுகிடுவேம் அரசு மருத்துவமனையை
அனைவரும் ஒத்துழைப்போம் அன்புடனே

இராப்பகல் பாராது இருவிழிகள் மூடாது
இன்னுயிரை துட்ச்சமாக எண்ணி ஏற்ற கடமை
இலக்கை நோக்கி பயணிக்கும் எல்ல ஊழியர்க்கும்
இயன்ற ஒத்துழைப்பு நல்கி  தனித்திருந்து விரட்டிடுவோம்

கொரான கெடும் பிணி மனிதம்
கென்று திண்ணும் மாய எமன் அதை
கொன்றழித்திட மானுடம் முழுதும் ஒன்றுபடுவோம்
வென்று காட்டுவோம்  தனித்திருந்து

வெள்ளை பேய் விரட்ட அன்று  வீட்டை விட்டு
வெளியேறி போரடினோம்  வென்றேம்
கொள்ளை நோய் கொரானவை விரட்ட இன்று
கொள்கை ஏற்போம் வீட்டுக்குள் தனித்திருந்து 

Monday, November 04, 2019

தாயவள்

தாயவள் தோளில் தவழ்கின்ற
தூயவளே கண்மணியே!
துள்ளிக் களித்தே பின் நோக்குகிறாய்
தூக்கம் வரவில்லையோ? – தூளியது ஏங்குதம்மா
அன்னையவள் அள்ளியணைத்து
ஆரத் தழுவி அமுதே தேனே அஞ்சுகமே என
ஆசையாய்க் கொஞ்சுகையில் நெஞ்சில்
அன்பு தவழுதம்மா ஆருயிரும் சிலிர்க்குதம்மா!
பிள்ளைக் கனியமுதே பேசும் பொற்சித்திரமே
கள்ளமில்லாக் கற்கண்டுப் பொற்குவையே
வெள்ளை உள்ளத்து வளர்கவின் நிலவே
எல்லையில்லா இன்ப அமுதூற்றே ஆவி துடிக்குதம்மா!
உன்னை வளர்த்து ஆளாக்க
உன் அன்னையவள் அல்லும் பகலும்
உழைத்திருப்பாள் ஊணுறக்கம் இல்லை அவளுக்கு
உலகே நீ தான் என்று உள்ளம் மகிழ்ந்திருப்பாளம்மா!
காலத்தால் அழியாத களவாட முடியாத
கல்விச் செல்வம் அதைக் கண்ணும்
கருத்தாக நீ கற்றிடவே கலாசாலைக்கு அன்போடு
கருமைப் பொட்டு வைத்து அனுப்பிடுவாளம்மா!
அன்னை போல் அன்புகாட்ட ஆர் உளார்
அவனிதனில்? அன்னையே யாவரும் அறிந்த
அன்பு தெய்வம்மம்மா அவளுக்கும்
அன்பு செய்வோமம்மா அகிலம் வாழுமம்மா!

பூங்கிளிகள்

கதிர் விழித்த இளங்காலை வேளையிலே
கதிர் விளைந்த சோளக்கொல்லை எல்லையிலே
கதிர் கொய்ய வந்த கான் கிளிக்கூட்டத்தில் என்விழிக்
கதிர் கண்டுவியந்த கண்கொள்ளாக் காட்சியிது!
பச்சைப் பசுங்கிளிகள், பறந்து திரியும்
பசுஞ்சோலைப் பூங்கிளிகள் இரண்டும்
இச்சை கொண்டு இணைந்திருக்கும் இன்பக் காட்சியிது
இணையில்லா இயற்கையின் ஆட்சி இது!
செம்பவள மூக்கழகில் செயலிழந்தேன்
செழும் மஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்
சேர்ந்த இரு விழியின் இணையழகில்
சொந்த நினைவினை நானிழந்தேன்!
விழித்தெழுந்தேன் விளைந்த கற்பனை
மொழிவிடுத்து வியனுலகில் நடைமுறையில்
மெலிந்த பல்லுயிர்களுக்கு விளையும் கேடெண்ணி
அழிந்த அவற்றின் கூடெண்ணி ஐயுற்றேன்!
வஞ்சனையாய் வலைவிரித்துச் சிறைப்பிடித்து
வாயினிலே சூடுவைத்து வாலறுத்து
வண்ணப் பசுஞ்சிறகை வன்முறையாய் வெட்டிவிடும்
வஞ்சகர் கையிலினிச் சிக்காது விழிப்புடனே பறந்திடுவீர்!
முக்காலம் அறிந்திடவும் முயற்சிக்கா வாழ்வின்
முழுப்பயனும் தெரிந்திடவும் மூளையில்லா
மூடர்சிலர் இக்காலத்தலும் உங்களைக் கூண்டிலிட்டு
மூக்காலே சீட்டெடுக்க முடுக்கிடுவார் சிக்காதீர்!
மாமதுரை அரசாளும் அங்கயற்கண்ணி
மங்கை மீனாட்சி திருத்தோளில் அமர்ந்திருக்கும்
மங்களக் கிளிகள் உங்கள் அருளாலே மாநிலத்தில்
மங்காமல் பசுஞ்சூழல் தழைத்தோங்கட்டும்!