Wednesday, February 19, 2014

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்



அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்
ஆண்டுகள் ஐந்து மாண்டாலோ
ஆதரவிழந்து ஆட்சி கவிழ்ந்தாலோ
அடுத்து வருவது தேர்தல் இனி
ஆண்டவனும் ஆள்பவனும்
ஆசை காட்டி வந்திருவார்.

ஆட்சிதனில் தன்னை ஏற்றி வைத்தால்
அனைத்தும் செய்திடுவேன்
அடிமையாய் நானிருப்பேன் என
அடி வீழ்ந்து தொழுதிடுவார்
அன்பொழுக பேசிடுவார்.

ஊமையாய் நீ இருந்திட்டால்
ஊழலற்ற ஆட்சி என்பர்
ஊருக்காக உழைப்பவர் நான் என்பார்
உண்மை என நீ நம்பி
ஊன்றிவிடாதே உன் வாக்கை.

எரிப்பதற்கு அடுப்பென்பார்
ஏறி இறங்க ஓடிவரும் பேருந்து
எட்டு வழி சாலை என்பார்
எல்லோர்க்கும் கல்வி தரும்
ஏழைகளின் காவலன் தான் என்பார்.

கொட்டும் மழைக்கு குடை பிடிப்பேன்
கொழுத்தும் வெயிலுக்கு நிழல்தருவேன்
கொல்லும் நோய்க்கு மருந்தாவேன் குடல்
கிள்ளும் பசிக்கு உணவாவேன் என
கொடுத்திடுவார் கொள்கையில்லா பல வாக்குறுதி.

உங்கள் தெருவெல்லாம் மின்விளக்கு
உயர் தேரோடும் பளிங்கு வீதி
ஊர்தோரும் குளம் கிணறு
உயர் கல்விச்சாலை ஊருக்கொன்று என
உறக்கத்தான் முழங்கிடுவார்.

விலைவாசி விண்கலம் ஏறி
வியாழனில் வாசிக்கச் சென்றாலும்
விளைவிக்கும் விவசாயி
விலையின்றி வறுமையில் செத்தாலும்
விடைகாண தெரியாமல் வீணராய் வீற்றிருப்பார்.





சிரமப்பட்டு கடலோடும் செம்படவன்
சிங்களவன் கடற்படையால் சிறைபட்டு
சித்தரவதை அனுபவிக்க எங்களவன் அவனோடு
சிரித்து கைகுலுக்கி சிற்றுண்டி உண்டங்கே
சிற்றறிக்கை வாசியான் எல்லை தாண்டலாகாதென்று.

சாத்தான்களின் வேதமாய்
சண்டாளர்களின் கூடமாய் அரசியல்
ஜனநாயகம் சாகும் தருவாயில்
சாட்சிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது
சமத்துவத்தை நியாயப்படுத்த.

பணம் கொடுத்தவன் ஒருபுறம்
பஞ்சப் பரதேசிகள் மறுபுறம்
பாரத தேசத்தின் நீதி
பகல் வேதசாரிகளை கையிலா?
பகுத்தாராயாமல் வாக்களிப்பவன் மையிலா?

அடிபட்டு உதைபட்டு
அகிம்சையால் பெற்ற விடுதலை விழுமியங்கள்
அரசியல் அரிதாரம் பூசிய
அயோக்கியர்களின் அடகுக் கடையில்

நீமி மன்றங்கள் நியாயத்தை
நீண்டகால இடைவெளிகளில்
நிறை பார்த்துக் கொண்டே போகிறது
நியாயத் தராசுகள் நினைத்தபடி சாய்கின்றன.

வாழ்க்கை இயந்திரங்களின்
வர்க்கப் போராட்டங்களுக்கிடையே
வாழ்வாதார உரிமைகளுக்காக
வாதாட முடியாது தோற்று
வறுமையோடு வரிசையில்

வறுமை தின்ற வாழ்வுக்கும்
வழி தேடும் விழிகளுக்கும்
வாக்குச் சீட்டுகள்தான்
வஜ்ராயுதம் ஆனால் அதையும்
வீணாக்கல்லவா விற்றுத் தொலைத்துவிட்டோம்.


வாக்கு வாங்கி (ஏடிஎம்) இயந்திரமே நீ
வாக்களித்து முடித்துவிட்டாய்
வக்கற்றவன் ஆகிவிடுவாய்
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம்
வருமானம் பார்க்கத்தான்.

சலவை உடுப்பு உடுத்தி
சட்டசபை சென்றமர்ந்து
சம்பளந்தான் பெற்றிடுவார்
ஜனம்படும் துயர் மறந்து
சயனத்தில் ஆழ்ந்திடுவார்.

முதல் சுற்று எண்ணி முடிந்ததுமே
முகம் மாறி மலர்ந்துவிடும்
முழு வெற்றி பெற்றுவிட்டால்
முன்தந்த உறுதியெல்லாம்
முன்பனிபோல் கரைந்துவிடும்.

அமைச்சர் பதவிக்கு ஆளாய் பறந்திடுவார்
அரசு சொத்துக்களை அபகரிக்க
அழகாய் புரிந்துணர்ந்து ஓப்பந்தம் போட்டிடுவார்
அனைத்திலும் ஊழல் செய்திடுவார்
அப்பாவி மக்கள் வயிற்றில் தப்பாமல் அடித்திடுவார்

கொஞ்சமும் வெட்கமின்றி
கொலைகாரன் கொள்ளைக்காரன் எல்லோரும்
கொள்கை என்றே கூட்டணி சேர்த்திடுவர்
கொடும்பாவி கொழுத்தியவர்கள் இணைந்தே
கொள்கை முழக்கம் செய்திடுவார்

ஆம் இன்றும் நம்பிக்கை பூக்கிறது
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும் என்று
அன்றே எம் பாட்டன் இளங்கோ
அறிவித்துச் சென்றது.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் உண்மைகள்... கொடூரங்கள்...

தனிமரம் said...

அறம் கூற்றாக வரும் என்று நம்புவோம்.