Tuesday, October 22, 2019

கிழக்குச் சூரியன்


கீற்றுக் குடிசையின் கிழக்குச் சூரியன்

நேற்று இன்றின் நீங்க துயரை- நாளை 
மாற்றும் நம்பிக்கையின் மின்னல் கீற்று
காற்று புகா இடத்திலும் பாயும் ஓளியின் நாற்று

இடிந்த சுவரை எண்ணி
இடிந்திடாதே தம்பி
இழந்ததை எண்ணி கலங்காதே
இருப்பதைக் கொண்டு போராடு

அள்ளக் குறையாத அறிவூறும்
அட்சயப் பாத்திரம் தான்
அருகில் இருப்பவை எல்லாம்
அள்ளிப் பருகு  ஆளுமை கொள்

கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின்
கீழடி கூட நம் காலடிக்கு கீழே தானே கிடந்தது 
கிளரித் தோண்டிய பின்னே தான் அது தமிழனின்
கிட்டா பெருந்தனம் எனப் புரிந்தது

தலைநிமிர் தடை தகர்
தளையறு தடம் பதி
விளையட்டும் புது விதி
வீழட்டும் பழமையின் சதி

கண்ணீர் சிந்தியொரு பயனுமில்லை
காலத்தை பூட்டிட யார் கையிலும் சாவி இல்லை
கடினம் ஆயினும் கனமாய் அடி
கதவுகள் திறக்கும் கவலைகள் பறக்கும்

வீணாய் கிடந்தால் வீழ்ச்சிதான் விரைந்தெழு
விண்ணளக்கும் உன் உழைப்பால்
மண்குடிசை வாசலையும் வா
பொன் பளிங்கு மாளிகையாக்கலாம்

நன்றி: -https://www.vallamai.com/?p=93893&cpage=1#comment-19509

படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்-October 16, 2019
”கீழகழ்ந்து தேடாமல் இருந்தவரை வைகையின் கீழடிகூட நம் காலடியில்தான் கிடந்தது. கிளறித் தோண்டிய பின்புதான் அது தமிழனின் கிட்டாப் பெருந்தனம் எனப் புரிந்தது. ஆதலால் தலைநிமிர்! தடை தகர்! பழைமைச் சதியை வீழ்த்திப் புதுமை விதியை நிலைநிறுத்து! உழைப்பால் உயர்ந்துநில்!” என்று சிறுவனுக்கு நம்பிக்கை உரமேற்றும் நல்லுரைகளைச் சுமந்திருக்கும் இக்கவிதையை யாத்த திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். -மேகலா இராமமூர்த்தி


No comments: