Friday, December 01, 2006

கல்விதனை ஊட்டு

கருவில் இருக்கும் சிசுவிற்கே
கல்வி புகட்டும் காலத்திலே
கல்லுடைக்க பிள்ளைதனை
கருணையின்றி அனுப்புவது என்ன கோலம்

பாட்டனும் பூட்டனும் ஏன்
பரம்பரையே பள்ளிக்கூடம் சென்றதில்லை
பட்டியாடு மேய்ப்பவனுக்கு
படிப்பெதற்க்கு என்றா கேட்க்கிறாய்?

வந்ததைக் கொண்டு
வெந்ததைத் தின்று
நொந்து போன உன் வாழ்கையில்
சிந்தனைக்கு எங்கே நேரம்?

பிள்ளை ஒன்று பிறந்துவிட்டால்
கொல்லைச் சாமி முதல்
எல்லைச் சாமி வரை
வெள்ளாட்டு குட்டி வெட்டுவதாய் வேண்டுகிறாய்

வேண்டுதல்கள் பல செய்து
ஆண்டுகள் சில காத்திருந்து
ஆண்டவன் அளித்ததென மகிழ்கின்ற பிள்ளைக்கு
வேண்டும் கல்விதனை தந்தாயா? நீ

தந்தையென்றும் தாயென்றும்
தன்னுறவை அறிவித்த நீ தரணிதனில்
தளிர் குழந்தைக்கு தனித்தியங்க கல்வி தரும்
தக்க குருவை காட்டவில்லை ஏன்?

தலை எழுத்தை துணைக்கழைத்து
தளிரறிவை மழுங்கடித்து
பணங்காசு தேடிவர
பச்சப் புள்ளைய வித்ததென்ன?

பாடசாலை கூடத்திலே
பாட்டுப் படித்துத் திரிபவனை
பலசரக்கு கடையினிலே பத்தஞ்சு கூலிக்கு
பலியாடாய் க்கிவிட்டாய்

ஆத்தங்கரை மணலினிலே
ஊத்துப் பறித்து விளையாடும் பிஞ்சுகளிங்கு
அடுப்பங்கரை தீயினிலே
இடுப்பொடிய வேகுதடா

புத்தகம் பிடித்து படிக்கும் கைகளிலே
சுத்தியல் கொடுத்து கல் உடைக்கவைக்கிறாய்
பத்திரிக்கை படிக்கும் கைகளிலே
பத்துப் பாத்திரத்தை கொடுத்துவிட்டாய்

சரித்திரம் படைக்கப் பிறந்தவனை - உன்
தரித்திரத்தால் சக்கரம் சுற்ற வைத்தாய்
சித்திரம் தீட்டப் பிறந்தவனை
சத்திரத்தில் எடுபிடியாய் விட்டுவிடாய்

ஏடேடுத்து படிக்கும் குழந்தை எல்லாம்
எச்சில் இலை எடுக்குதடா
ஏதேதோ சட்டமெல்லாம் போட்டுவிட்டார்
ஏனோ இன்னும் இக்கொடுமை நடக்குதடா

பீடிக்கட்டு சுற்றிடவும்,
தீக்குச்சி அடுக்கிடவும்,
சித்தாளாய் சுமந்திடவும் செய்து
சிட்டுக் குருவிகளை சிறகொடித்துவிட்டாய்

பச்சிளம் குழந்தைகளை
பணிக்கமர்த்துவது பாவமடா
பள்ளிக்கூடத்தில் துள்ளிக் திரிபவனை
பணிக்கூடத்தில் சிறைபிடித்தாயடா

குழந்தைகளை பணியமர்த்தல்
குற்றமென்று சட்டமுள்ள காலத்திலே
கூச்சமின்றி மழலையரின்
உழைப்பதனை திருடுகிறாய்

கொத்துக் கொத்தாய் குழந்தைகளை
கொத்தடிமைச் சந்தைதனில்
விற்றுமுதல்லாக்கிவிட்டு
வெற்று முழக்கம் செய்கின்றாய்

கருப்பு மனதை பிடித்த
கல்லாமை பேயை தூர ஓட்டி -உன்
கருவில் வந்த மழலைக்கு கருணை கொஞ்சம் காட்டி
கல்விதன்னை ஊட்டு

கல்வி என்பது காலத்தால் அழியாத
கற்பகத்தரு அதை
கவனத்தோடு பயிர் செய்து - நீ
கனிகளைப் பெறு.
சுபா

1 comment:

யாழ்.பாஸ்கரன் said...

எனக்கு நானே கருத்து கூற சங்கடமா இருக்கு யாரவது கருத்து சொல்ல வாங்களேன்