Thursday, September 25, 2014

பெய்யெனப் பெய்த மழை

பெய்யெனப் பெய்த மழை
பொய்யாய் போனது
பொங்கி வழிந்த பெருநதிகள்
பொட்டலாய் ஆனது


வெய்யோனின் வெஞ்சினப் பார்வையால்
வெண்ணெய் போல் உருகியது துருவப்பனி
வெடித்துக் கொட்டிய மேகங்களாய்
வெள்ளக் காடாகி மூழ்கியது சமவெளியும்

மையிருட்டு கானகங்களின்
கையிருப்பு வைப்பு நிதியுமாய்
வைர மரங்களையும் கனிம வளங்களையும்
கையூட்டு கூட்டுக் களவாணிகள் கருக்கலைப்பு செய்துவிட்டனர்

செயற்கையின் போலித்தனங்களுக்காக
இயற்கையின் இருதயத்தையே
இமசித்துப் பார்த்து இன்பம் காணம்
இனம் மானுட இனம் மட்டுமே.

புலி கடித்துப் பலியானதை
பரபரப்பாக்கி பணம் பார்க்கும் ஊடகங்கள்
பலியானவன் புலியிருக்கும் இடம் தேடி
போனது என் என்று பகுத்தாய்வதில்லை.

காடழித்து நாடாக்கும் மானுடமே
நாடழித்து காடாக்கும் நாளும் நாளைவரும்
முடியிழந்த தசரதனின் பிள்ளைபோல் அன்று காடு 
தேடும்பொழுது கண்டிப்பாய் உமக்கு அதன் கதவுகள் அடைக்கப்படலாம்.

நாடுகள் தோறும் நகரங்கள் தோறும்
கூடுகின்றார், கூட்டுகின்றார் கூட்டங்களை
சூழல் விழிப்புணர்வு வாத விவாதங்களில்
சுவையானதாய் மட்டும் இருக்கிறது சுமை ஒன்றும் குறையவில்லை.

சுரண்டல் வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்கு
பலியிடப்பட்ட இயற்கைத்தாயின்
இளம்பிள்ளைகளின் எண்ணிக்கை
எண்ணிப்பார்க்கவே இயலாத எண்களில்

இயற்கையும் ஒரு நாள் விழித்தெழும்
இடியென மழையென
பூமித்தாயின் மடிபிளந்து அன்று
விதியென சாகும்முன் மானுடமே விரித்தெழு.

விதி மீறி நீ களவாடியது போகட்டும்
சதி செய்து நீ சாய்த்தழித்தவையும் போகட்டும்
இனியாவது இருப்பவைகளையாவது
கொஞ்சம் விட்டுவை என கெஞ்சுகிறேன்.

நாளை மலரும் நமது முல்லைகள்
தொல்லைகள் இல்லாமல்
வெள்ளை உள்ளகளோடு
எல்லையின்றி உறவாடட்டும் அன்னையின் மடியில். 

No comments: