Monday, September 30, 2019

இன்புற்று இருப்போம்

இன்புற்று இருப்போம்!
வாசனைப் பூ மகளே வசந்த வயலின்
வாடாத புத்தம்புது மலர் மல்லிகையே
வண்ணப் பொடிகள் வாரியிறைத்ததால்
வானவில்லானதோ உன் கன்னங்கள்?
கொண்டாட்டமே களிப்பு
கொண்டாடுவோமே கவலை மறந்து
கொடுத்தால் வளருமே அன்பு அதைக்
கொடுத்தே பெறுவோம் அன்போடு!
எல்லையில்லாப் பால்வெளியின்
எழுச்சிமிகு மின் மினியே!
எங்கும் ஒளிதரும் கதிர் போல
எழிலே நீ எதிர் வந்தால் பொங்கும் மகிழ்ச்சி!
பொன்நகை அணியாச்
சின்னத் தாரகையே – உன்
மின்நகைப் புன்னகையால்
மண்ணில் அன்பு மீண்டும் தழைக்கட்டும்!
கார்குழலை வாரிமுடி!
கருணையல்ல உரிமை!
கட்டுத்தளைகளை வெட்டி எறி!
கட்டவிழட்டும் அடிமை முடிச்சு!
இனி இல்லை எங்கும் எல்லை
இனிதாகுமே வாழ்வின் பயணம்
இனிக்க இனிக்க வாழ்ந்திடுவோம்
இன்புற்று இருக்க அன்புற்று இருப்போம்!


Thursday, September 19, 2019

பொல்(ள்)லா(ளா)ட்சி கசப்புகள்


பொல்(ள்)லா(ளா)ட்சி  கசப்புகள்
மானுடம் உயிர்த்திட மண்ணுலகம் நிலைத்திட மடி தந்த
மாதவ மங்கையர்க்கு மனம் நிறை மகிழ்வான தலைவணக்கம்
மாசில்லா பெண்மையின் மாண்புகள் காப்போம் 
மாதியுடை மதர்கள் மானம் காப்போம் 

அன்பு காட்டும் தாயாய்
அறிவுரை சொல்லும் அமைச்சராய் தாரம்
அள்ளிக்கொஞ்சும் மழலையாய் மகள்கள்
ஆறுதல் தரும் ஆதரவாய் அக்கா தங்கைகள்

இயன்றவரை எல்லார்க்கும் எல்லாம் தரும்
இறையாய் மங்கையர் இருந்தும்
இன்னல்கள் எல்லாம் வெந்தனழாய் வருவது
இந்த தேவதைகளுக்குத்தான்

மேலை நாட்டின் பண்பாடு  
ஏழை நாட்டுக்கு ஏன் வேண்டும்?
வாழும் முறையில் மாற்றம் வேண்டும்தான்
வழுக்கி விழுவது சேறாக இருத்தல் தான் வேண்டுமா?

வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்
வலைகள் விரிக்கப்படும் திறன்பேசிகளில் வசீகரமாய்
பொல்(ள்)லா(ளா)ட்சி  கசப்புகள் புத்தி புகட்டுமா நமக்கு ?
வழக்குகள் வழுவிழக்கபடும் வாதாட நேரமின்றியே

துள்ளல் நடைக்கும் உடலொட்டி உடைகளுக்கும் விடையளிப்போம்
நிலை தடுமாறாமல் இருக்க மீசை பாரதியின் நிமிர் நேர் பார்வை பெறுவோம்
பொல்லா சுவர்ணத்தின் தேவதைகளாக வேண்டாம்
பொல்லாங்கில்லா நல்லாட்சி புவியின் பூ மகள்களாவோம்

Wednesday, September 18, 2019

இயற்கை

முத்து முத்து பனித்துளியில்
முகம் காட்டி சிரிக்கும் மலர் இதழ்களை
முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
நித்தம் நித்தம் தவிக்கிறது

மென் காலை புலர் பெழுது
பென் மஞ்சள் மலர் கொய்து
மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
கண்ணாடி சித்திரச் சேலையோ இது

கண்கள் மயங்கும் காட்சிப்பிழை தான்
காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்
காற்று நுழைந்தால் கலைந்து விடும்
கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

சின்ன சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
சித்திர தூரிகை கொண்டு வரைந்த
சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
விடியலின் விடுகதை அழகை
விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ

இரண்டாம் தாய்

இரண்டாம் தாய்
 
தாயில்லாப் பிள்ளைக்கு எல்லம்
தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
தன் பிள்ளை தானே வளரும் என்று
தன் பாலை ஊரார் பயனுற தரும் அன்னை நீ

வாயில்லா ஜீவன் தான் நீ ஆயினும்
வாரித் தருவதில் வள்ளல்
வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி

உணவளிக்கும் உழவருக்கு

உயிர் கொடுக்கும் தெய்வம்
உன்னை வளர்பவர் வாழ்வை
உயர்விக்கும் உன்னத நண்பன் நீ

உழவனை தொழுகின்றதாக கூறும் உலகம் அவன்
உழைப்பை உறிஞ்சி களித்திருக்கும்
உடல் பெருள் ஆவி அனைத்தும் தரும்
உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு

ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
ஈத்துவக்கும் இன்பம் உடைய பசுவே
ஈரமுள்ள நெஞ்சு கொண்ட உனை
ஈகை குணத்தில் மிஞ்ச யார் உளார்

மடிநிறைய பால் இருக்கு
மனம் நிறைய அன்பு இருக்கு
மண்ணுயிகள் எல்லாம் உன்னைப் போலானால்
 மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும் 

வெற்றித் திலகம்









வெற்றித் திலகம் நெற்றியில் இட்டு
வென்று வா மகனே சென்று என்று
வெஞ்சமர்களம் காண வழி அனுப்பும்
நெஞ்சுரம் கெண்டவீரத்தாயவள் வாழி வாழி

ஈன்ற தாய் அவள் இட்ட கட்டளைக்கு
இம்மியளவும் மறுப்பு இல்லை
இனி பொறுப்பதற்கு நேரமில்லை
இப்போதே எடு வாளை என்று புறப்பட்ட வீரன் வாழி வாழி

சமர்க்களம் என்ன சாப்பாட்டுப் பந்தியா
சம்மணம் இட்டு அமர்ந்து உண்டு களிக்க?
சாவு ஈவு இரக்கமின்றி விளையாடும்
சதிராட்டத் திடல் சற்றே அயர்ந்தால் பறந்திடுமுயிர்

ஈட்டி முனை முன் மார்பு காட்டும் போர்முனை அல்ல இது
இலத்திரனியல் பொறிகளுடன் ஒரு மரண விளையாட்டு
எறிகணைகள் சீறிச் சிரித்திடும்
ஏவுகணைகள் மாறி மாறி மறித்திடும்

விரி வானில் திரிகின்ற வான்கலங்கள்
வெறிகொண்டு திரிகொளுத்தி வீசி எறிந்த
வெடிகுண்டால் விண் அதிரும் மண் நடுங்கும்
வெடித்துச் சிதறியது குண்டுகள் மட்டும் அல்ல அமைதியும் தான்!

வென்றால் வெற்றிப் புகழ்மாலை
வீழ்ந்தால் புகழொடு பூமாலை
வென்றாலும் சென்றாலும் வீரனுக்கு
ஈன்ற தாய்நாடு காப்பதே முதல் வேலை

முதுமை


நெறியில் பழுத்த பழம்
நெற்றியில் இழுத்த திருநீற்றுச் சிவம்
நேற்றைய பட்டறிவின் முதிர் நரை
நேரற்ற சுருக்கங்கள் முதுமையின் முக்தி நிலை   

அச்சிட்ட தாளில் அப்படி என்ன தெரிகிறது?
அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? இல்லை
அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா?
அழகானதோ அழுக்கானதோ அதுவும் ஒரு சுகம் தானே?

எத்தனை சாதனைகள் எத்தனை சோதனைகள்
எண்ணிக்கையில்லாத வாழ்க்கையின் பின்னல் முடிச்சுகள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய்
எல்லாமும் எப்படியோ அவிழ்க்கப்பட்டு விட்டது!

சிரிப்பாகத்தான் இருக்கிறது நுனி மரத்துச்
சிறு குருத்து மட்டைகளுக்கு
சிவந்து பழுத்த அடி மட்டைகளைப் பார்க்கும்போது
சீக்கிரமே தாங்களும் பழுத்துவிடுவோம் என அறியாமல்!

கடமைகள் முடித்தாகிவிட்டது
கடன்களும் அடைத்தாகிவிட்டது
கடந்த காலத்தில் தேட மறந்த
கடவுள் மட்டுமே துணை கடைசிக் காலத்தில்

இனி எல்லாம் அவன்தான் அவனே அன்பின் கூடு
இயன்றதைச் செய்தே இன்புற்று வாழ,
இனியவை தேடி இறைவனை நாடு
இனி இல்லை என்றும் ஒரு கேடு
!