Wednesday, February 19, 2014

போலிகள்

ஆள் போலி
அன்பு போலி
ஆண்டவன் போலி
ஆள்பவனும் போலி


இன்பம் போலி
இனியவை போலி
இயக்கம் போலி
இன்னலும் போலி

ஊன் போலி
உடல் போலி
உதடுகள் போலி
உள்ளமும் போலி

கண் போலி
காண் போலி
காட்சிகள் போலி
கடவுளும் போலி

காதல் போலி
கற்பு போலி
கனவும் போலி
கவிதையும் போலி

மண் போலி
மனம் போலி
மனிதர் போலி
மாண்புகளும் போலி

நான் போலி
நீ போலி
நட்பு போலி
நல்லவை போலி

எங்கு நோக்கினும்
எதில் நோக்கினும்
எவரை நோக்கினும்
அங்கெல்லாம் போலி.

வேசம் தரித்த வாழ்வியலின்
வேதனை குமுறல்களுடனே
போலி போர்வைக்குள் பொதிந்து கிடக்கிறது
காலியான பாசப் பிணைப்பின் எச்சங்கள்.

நல்லவைகளை யாரும்
நம்ப மறுக்கும்போது
அல்லவைகள் அரங்கேறுகின்றன
நம்பிக்கை மோசடிகளாக


பளபளக்கும் பகட்டு வாழ்வின்
புண்பட்டு புரையோரக் கிடக்கும்
இருண்ட பக்கங்களை யாரும்
எளிதில் எட்டிப் பார்ப்பதில்லை.

வெளிவேட அரிதார பூச்சுக்களில்
வெகுவாக கவரப்பட்ட
விட்டில் பூச்சிகளாய்
விளக்கின்றியே விழுந்து விடுகின்றோம்.

அசல் எது நகல் எது என
அலசிப் பார்க்க நேரம் இல்லாத போது
அசலைப் போல ஏன் அதைவிட நேர்த்தியாய்
ஆயிரம் போலிகள் அலங்கார அணிவகுப்பில்

இன்றல்ல நேற்றல்ல
ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே
இந்தப் போலிகள் வாலாட்டியதாலேயே
இலக்கணப் போலி என்றானே தொல்காப்பியன்.

மறந்து மறந்து விழிக்கும்
மயக்க நிலை மாறி மனம்
இயக்க நிலையில் இருந்தால்
தயக்கமின்றி அசல் அடையாளப் படுத்தப்படும்.

உணர்வுக்கு ஆட்பட்டு உண்மையை
ஊமையாக்கலாம், ஆனால் சிலகாலம் வரையே
எத்தனை ஒப்பனை முலாம் பூசினாலும்
உண்மைக்கு மாற்று உண்மை மட்டுமே

பொய்மைக்குத் தான்
பொம்மை சாட்சிகள் தேவை
வாய்மைக்கு என்றும்
வாக்கு துய்மை ஒன்று போதும்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல அசல்
பொன் தீயிற் சுட்டாலும் மண்ணாவதில்லை
போலிகள் போலிகளே அல்ல என்றும் எங்கும்
பொருந்தாத வெற்று பெருங்காய காலிகளே.

நன்றி மறவா நட்பும்
நன்னெறி விலகா நடையும்
நாபிறழா சொல்லும்
நல்லதையே அள்ளித்தரும்.

No comments: