Tuesday, May 15, 2007

காலமே விடை சொல்

வறண்டு வாய் பிளந்த
வண்டல் வயல்களில்
வாடும் பயிர் கண்டு
சடுதியில் சாய்ந்தன உயிர்கள்

கருகியது குறுவை
இறுக்கியது குத்தகை
சம்பாவும் நம்ப முடியவில்லை
சாவு மட்டும் நம்பிக்கையாய்

கடன் பட்ட கணக்கு மட்டும்
உடன் வட்டியும் குட்டியுமாய்
பட்டம் பார்த்து நட்ட நடவு மட்டும்
பட்டு காய்ந்து பொட்டை காடாய்

வாழையும் நெல்லும்
வளமாய் விளைந்த
வயல்களில் வறட்சி மட்டும்
வற்றாத ஜீவ நதியாய

தஞ்சை நெற்களஞ்சியம்
தற்கொலை சாவுகளால்
தாக்குண்டு கலங்கியபடியே
தஞ்சமடைந்தது பஞ்சத்தின் பிடியில்

சமைத்த சாப்பாட்டுக்கு
சாரிசாரியாய் சத்துணவு கூடம் நோக்கி
ஊருக்கு படியளந்தவன்
உணவுக்கு தட்டேந்தி

எங்கே எவரோ பட்ட துயருக்கெலாம்
இங்கே இவர் கலங்கி கொடையளித்தார்
இன்றே இவர் படும் துயர் நிலை கண்டு
இடர் கலைவார் யாருமில்லை

போலிச் சமத்துவ போதனைகள்
போதித்தே போக்கு காட்டுவார்
பொங்கும் வேதனை புண்ணிலேயே
கங்கும் அனலாய் தீ _ட்டுவார்

எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் எது
எரிந்தாலும் எனக்கென்ன சோகம் என்று
எதிர் எதிர் அணியில் கரைவேட்டிகள்
எதிர்ப்பு அறிக்கைகுள்ளேயே எங்கள் ஏழ்மை எருவாகிறது

விடியலை காணுமுன்னே அஸ்தமிக்கும் நாங்கள்
விடுதலை பொற்று
விளைச்சல் காண்போமா? காப்போமா?
விரைவாய் விடை சொல் காலமே

No comments: