Tuesday, March 11, 2025

இனிது இனிது

      இனிது இனிது


வறுமை வாட்டினும் கற்றல் இனிது

பெருமை மிகு அவையில் வாக்குத் திறன் இனிது

பெருத்த செல்வம் பெற்று இருப்பினும்

வருத்தி உழைத்து வாழ்வது இனிது



பொருளுடையவன் ஈகை இனிது

அருளுடைய சான்றோன் துணை இனிது

அருந்துணையின் மனம் அறிதல் மிக இனிது

அருமை நட்பு அதனினும் இனிது



குறையில்லா செல்வம் இனிது

குறையாத குணமுடை கல்வி இனிது

குற்றமில்லா ஒழுக்கம் இனிது

முற்றும் துறத்தல் நன்கு இனிது



மாண்புடை மானம் இனிது

மானமிழந்து வாழாமை இனிது

மனம் அஞ்சா வாழ்வினிது

மாற்றுக்குறையா மறம் இனிது



கற்றர் முன் கவியுரைத்தல் இனிது

கல்லார்க்கும் கல்வி ஈதல் இனிது

கயவர் கை சாராமை இனிது

கடுஞ்சொல் கலவாமை இனிது



நன்றி மறவாமை நட்பிற்கு இனிது

நல்வழி பிறழாமை வாழ்விற்கு இனிது

நடுநிலை தவறாமை நீதிக்கு இனிது

நாடியவர் துன்பத்தை நீக்குவது இனிது



ஆய்ந்து அறிதல் அறிவுக்கு இனிது

ஆராய்தல் அதனினும் இனிது

அழுக்காறு இல்லாமை இனிது

அடுத்தவர் பொருள்க்கு ஆசைபடாமை இனிது



சினம் கொள்ளாமை இனிது

சிற்றினம் சேராமை இனிது

சிறுமதியோர் உறவு கலவாமை இனிது

சீற்றம் இல்லா சொல் இனிது



வறிநிலையாயினும் வாய் திறாவமை இனிது

வம்பில்லா வாழ்கை இனிது

விதை பொருளை உண்ணாமை இனிது

விளை பொருளை மறைக்காமை இனிது



இன்சொல் இனிக்க சொல்லுதல் இனிது

இன்சுவையாவிலும் நகைசுவை இனிது

இனிய சுற்றம் சூழ வாழுதல் இனிது

இனிது இனிது எல்லாம் எங்கும் எவர்க்கும் இனிது



இயலிசை நாட்டியம் இனிது

இயற்கை வழி நடத்தல் இனிது

இன்பம் பொங்க வாழ்தல் இனிது

இனிய மனம் இன்பத்தில் எல்லாம் இனிது



கருத்துதவி ; இனியவை நாற்பது-

விரும்பினால் முளைக்காது

விரும்பினால் முளைக்காது விதை












விரும்பினால் முளைக்காது விதை
விதைத்தால் தான் முளைக்கும்
வருந்தி உழைக்காது
வாழ்வு உயராது -நீ உணர் அதை

கனவுகள் கண்ணாடியை போல
கவனித்தால் முன்னேறிப் போகலாம்
கவலைகள் காற்றுக் குமிழ் போல-உடைத்து
கடந்தால் களிப்புடன் வென்றாடலாம்

சோம்பல் எப்போதும் சோறிடாது
சோர்வில்லா உழைப்பு சோம்பல் தராது
சேரிடம் தெளிந்தால்
செல்வதில் வெல்வதில் தடையிருக்காது

வெட்டிப் பேச்சுக்களை வெட்டிப்போடு
வீணர் கூட்டத்தை விட்டு வெளியேறு
விசையுறும் வலிமை நிறைந்தது இளமை
விளைந்த ஆற்றலை வீணாய்யாக்குதல் மடமை

விரி வானே உன் எல்லை
வீணாய் இருந்தால் வெற்றியில்லை
விடமுயற்சியால் தோல்வியில்லை
விழித்திடு உழைத்திடு வீழ்ச்சியில்லை

முயற்சித்த மனிதன் வீழ்ந்ததில்லை
முடியாதென்பது உலகில் இல்லை
முயலாமை வெல்வதில்லை
முயன்று பார் துன்பமில்லை

வீழ்வதில் தவறில்லை
விதி என வாழ்தல் சரியில்லை
வீருகொண்டு எழு
விலங்குகள் அறு விடுதலை பெறு

வில்லின் வேகம் நாண் வளையும் வரை
வேலின் வேகம் கைபின் செல்லும் வரை
வெற்றியின் வேகம் முயற்சிக்கும் வரை
வெல்வதன் நோக்கம் நேர்வழி செல்லும் வரை

சிற்பமாய் சிலை சிரிக்க சிற்பியிடம்
சீராக தலையில் அடிவாங்கும் உளி
சிகரங்களின் உயரம் தொட உழை
சிந்தித்து செயல்படு வலி திறக்கும் வழி

எல்லோரும் ஓர் நிறையே
ஏழ்மை என்பது நிலையல்லவே
ஏன் என்ற கேள்வியால் தான்
எழுந்திடும் விடியலின் புத்தொளிதான்

தாழ்ந்தவர் யாரும் தரணியில்யிலை
தளர்ந்தவர் யாரும் வென்றதில்லை
தேனடை கூட முழுகூடகும் சிறு ஈகளாலே
தேய்பிறை கூட வளரும் முழுமதியாக

தொலைதுர பயணத்தின்
தொடக்கம் முதல் அ(ப)டியில் தான்
தொட்டுவிட துணிந்தால்
தொடுவானம் கூட காலடியில்தான்

தேடலே இன்பம் தேடலே வாழ்வு
தேடலுக்கு இல்லை முடிவு
தேடாமல் இல்லை விடிவு -தேவையின்
தேடலே கண்டுபிடிப்பின் தாய்

செக்குமாட்டு வாழ்கை தேவையில்லை
செதுக்கு உன்னை செயல் கொண்டு
கொக்குபோல காத்திரு
கெக்கிபோட்டு தூக்கிடு

செய்வன செய் திருந்த
செய் செலவுகள் வரவறிந்து
செயலில் இறங்கு
செய் தொழில் பல

பாறையிலும் வேர்விட்டு
பசுஞ்செடி தளைக்கும்
பற்றுக் கொம்பு ஊன்றி பாங்காய் வளர்த்தால்
படர்ந்து பூத்து காய்த்து கனியும்

நம்மிரு கைகளின் துணை கொண்டு
நன்னடை கால்களின் வழிநடையால்
நம்பிக்கையோடு களமாடு
நல்ல காலமும் நற்துணையாகும்

நல்வழிதானே உன் படை
நம்பி துணி கிடைக்கும் விடை
நற்தொழில் தேடு
நலம் பல தரும் நாடு

நம்பிக்கை கொண்டால்,
நாளும் நம் வசமே
நல்லன செய்தால்
நம் வாழ்வும் நல்வரமே

வெற்றி யாற்கும் பொதுவாகும்
வென்றவர் பின்தன் நிற்க்கும் உலகு
வென்றபின் நீ அகிலதின் பொது என பழகு
வென்றுபார் உள்ளங்களை எல்லாம் அழ
கு

Thursday, December 05, 2024

போகிற போக்கில்

 வழி

விரிந்த வெளி

திறந்த விழி
பிறந்த ஒளி

புரியும் வழி.


செயல்
செய்யும் வழி

செயல் அளி
செவ்ஒளி காட்டும் வழி
சேரிடம் தெளி.


இயற்கை
இயற்கை மொழி

இசையின் ஒலி
இன்பக் களி

இன்னலை அழி.


இல்லா நிலை
இல்லா நிலை தான்

எல்லா நிலையும்
என்னிலையும்

எண்ணிய நிலையாகுமா?


காண்
காண் காட்சிப் பிழையின்றி
காண் கருத்துப் பிழையின்றி
காண் ஆட்சிப் பிழையின்றி
காண்பன காண் அறிவுப்பிழையின்றி.


கவலை

கட கசப்பானவை
கட கடுமையானவை
கட கடப்பவையாவும்
கடகடவென கடக்கும் கவலைகள்யாவும்.


தகர்ப்பு
தகர் தடை யாவும்
தகர் தயக்கம் யாவும்
தகர் தவறுகள் யாவும்
தகர் தரணியில் தகர்பன யாவும்.


களம்
களம் காண துணி
களம் கற்றுத்தரும் கைகளே முதல்
களம் கைப்பற்று
களம் காப்பாற்றும்.


வாய்மை
வாய்ச் சொல்லூம்
வாய்புக்கான சொல்லூம்
வாய்மையல்ல - அறம்
வாய்க்க சொல்லுவதே வாய்மை.

Wednesday, October 13, 2021

கடலோர காற்று

 கடலோர காற்று கவி பாடென்று சொல்லுது

கரை தாலாட்டும் அலையோ கைநீட்டி செல்லுது

கண்கண்ட காட்சிகள் என் நெஞ்சோடு பேசுது

கனவின்று நனவானது காத்திருத்தல் நலமானது

 

நானுமோர் குழந்தை யானேன்

நாளுமோர் புதிய ஞானம் பருகிப்‌‌‌ போவேன்

நாளையோர் புதிய உதயம் காணுவேன்

டக்கு மோர் எழுச்சி நடந்திட்டால் மகிழுவேன்

 

ஈரக் காற்று இன்னிசைக் கோர் ஊற்று

ஈதல் ஒன்றே  இனிய  ‌‌‌‌‌‌‌‌‌வாழ்வின்  உயிர்ப்பு

ஈன்ற தாயின் மடியாக இயற்கைக் தாயின் நீர்க்கரை

ஈடில்லா இன்பம் கோடி தேடி வந்த சுவரக்கம்

 

வான் புள்ளினங்கள் வரிசையாய் வலசை செல்லும்

வண்‌‌‌ணக் கிளிஞ்சல்கள் வாரிச்சுருண்டு வரும்

வாரிக் கடல் அலையினிலே ஏறி மிதந்து வரும் அதன்

வருகையும் புறப்பாடும் ஓர் ஒழுங்கு குழையா நிலையாகும்

 

துறுதுறு சிறுசிறுநண்டுகள்  குருகுரு நீர்மணலில்

விறுவிறுவென  விரைந்து குழி தோண்டும்

சரசரவென இரைந்து வரும் பெருந் திரையதை

பரபரவென கரைத்தே சலசலவென களிகொள்ளும்

 

புல்வெளிப் பனித்துளி எழில் பருகிய என் விழியால்

புனல் வெளியின்  புதுமை கண்டேன்

புதிதான பூவுலகம் விதவிதமாய் விரியக் கண்டேன்

புன்னகையாய் உவகை கொண்டேன்

 

கண்ணெட்டா கடுந் தொலைவு கடல் வெளியில்

கட்டுமர மிதவையிலே கழிவழி கைவழி வலை வி(ரி/தை)க்கும்

கடலுழவன் செம்படவன் நிறை குறையா திரை

கயல் திரவியம் சேர்த்து நலமுறவே கரை வர வேண்‌‌‌டும்

 07-10-2021

யாழ். பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679

basgee@gmail.com
noyyal.blogspot.in

  

Friday, October 23, 2020

முதுமை

 






ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
ஆடல் வல்லான் ஆலய வாசலில்
அடுத்த வேளைச் சோற்றுக்கு
அடுத்தவர் கையை நோக்கும் அவலம்!

நீறு அணிந்த பிறை நெற்றி
நீர்த் திரை மறைக்கும் சிறு விழிகள்
நிறம் கருத்த நெடு மேனி
வரம் வேண்டித் தவம் கிடக்கிறது!

பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி
பெற்றவரை விட்டு விட்டுத் தனம்
பெறப் பரதேசம் போனதனால்
பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்!

உற்ற துணை யாரும் இல்லை
உறுதுணையாக வரும்
உறவுகள் ஏதுமில்லை – புது
உறவு உருவானது புண்ணிய பூமியில்!

முதுமையின் முடியாமையால்
முயல்வதற்கு இயலாமையால்
மூவரும் மூலவரை நோக்கி
முக்தி வேண்டி பக்தி செய்கிறார்!

சங்கொலி முழங்கிச் 
சங்கடங்கள் தீர வேண்டுகிறார்
சங்கரனே சற்று இரங்கிடு!
சங்குப்பால் குடித்தவர்கள் 
செவியில் இதைச் சேர்த்திடு!

நன்றி

படக்கவிதைப் போட்டி 280