Monday, February 25, 2019

காப்பாயே…கடல் தாயே!




துள்ளி வரும் வெள்ளலையே தூங்காக்
கடல்தாயின் வெண்புனல் குருதி நீதானோ?
விடிவெள்ளிதனை விளக்காக்கி மடிவலையில்
மீன்பிடிக்கும் மீனவர்க்குத் துணை நீயாமோ?
திரைகடலின் உயிர்த்துடிப்பே கரை என்ற
சிறைக்குள்ளே உன்னைக் கட்டி வைத்தது யாரோ?
விரைந்து வரும் உன் வேகம்
கரையவளின் கைஅணைப்பில் அடங்குவதென்ன மாயம்?
எங்கும் திறந்தே கிடக்கும் நெடுங்கரைக்குப்
பொங்கிவரும் வெண்ணுரையால் போர்த்த,
புத்தம் புதுப் போர்வை நித்தமும் நெய்யும்
ஓய்விலா இயற்கை நெசவாளன் நீ!
உப்புக் காற்றோடு ஊடல் கொண்டால் நீ
தப்புத் தப்பான உயரத்தில் தாவி வருகிறாய்!
இப்புவியின் நிலப்பரப்பை இடைவிடாது தாலாட்டும் நீ
அவ்வப்போது ஆழிப் பேரலையாகி எங்களை அழவைக்கின்றாய்!
எம்மாந்தர் மனம்போலே ஒரு நிலை இல்லாமல்
எழும் வீழும் உன் எழில்கண்டு களிப்புறும் வேளையிலே
எச்சரிக்கை ஏதும் இல்லாமல் எமை அள்ளிச் செல்லும்
எமனாகப் பொங்கிவந்து அழிப்பது ஏனோ?
வெப்பம் தின்று குளிரூட்டும் நீ எங்கள்
தப்புத் தவற்றை பொறுத்தருளக் கூடாதோ?
இப்புவியின் சூழல்காக்க இன்னும் ஓர்வாய்ப்பு
எப்படியாயினும் தந்திட வேண்டும் கடல் தாயே… காப்பாயே!

----------- நன்றி
படக்கவிதைப் போட்டி 199-இன் முடிவுகள்
Wednesday, February 13, 2019, 22:05
”துள்ளிவரும் வெள்ளலையே! நெடுங்கரைக்குப் போர்த்துதற்கு வெண்ணுரையால் போர்வை செய்யும் நீ ஒரு நெசவாளனோ? நிலையிலா மாந்தர் மனம்போல் எழும் வீழும் நீ, எங்கள் தவறுகளைப் பொறுத்தருளக் கூடாதோ?” என்று மாந்தர் தவற்றை மன்னிக்கக் கோரும் கவிதையைக்  கடலன்னைக்குக் காணிக்கையாக்கியிருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  -
மேகலா இராமமூர்த்தி
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
----------------------------------------


No comments: