Saturday, January 12, 2019

இனி விழிப்போமா?




திருநிறை வளம்செறி வானுயர்
பெரு பரு தரு நிறை படர்கொடி வளர்
இருள் சூழ் பெருங்காடு தேடி
கரு முகில்கள் தஞ்சமென கொஞ்சவரும்

கொஞ்ச வந்த வான் முகில் கூட்டம்
கஞ்சமில்ல கருணை கொண்ட
நெஞ்சம் நிறைந்த வள்ளலைப் போல்- நிலமகளின்
பஞ்சம் தனிய மழையமுதம் அள்ளித்தரும்

காய்ந்தொடிந்து தலை(ரை) சாய்ந்து
ஓய்ந்து இறைந்து கிடக்கும் மரத்தடியில்
பாய்ந்து வரும் பருவத்து மழைக்காக
ஓய்வின்றி உயிர்த்திருக்கும் ஓட்டுடனே விதைக்கூடு

துள்ளித் துள்ளி துளி வீழ்ந்த பின்னே ஓடுடைத்து
துளிர்த்தெழுமே தூங்கா விதையினைமுளை
துளிர்கின்ற தளிர்கான தூங்கும் கதிரவனும்
துள்ளி எழுந்திடுவான் அதிகாலை சற்றுமுன்னே

வெள்ளிக் கதிரின் இளங்காலை பொன்
ஒளியால் வெளிவிரிவானம் அழகாகும்
ஒளிசேர் குளிர் வனத்தின் புதுமூச்சால் சுழல்
வளியின் வெளியெங்கும் சுகமாகும்

குயில் கூவும் மயில் அகவும் சிறகடித்து
குறுஞ்சிட்டுக்குருவி கூட்டம் கிறிச்சிடும்
குரங்கினங்கள் குதுகளிக்கும்
குள்ளநரி கூட்டங்கள் செல்லமாய் ஊளையிடும்

வெள்ளெலிகள் வேடிக்கைகாட்டும்
வேங்கை புலிகள் வெய்யில் காயும்
வேழமது பிளிரி முழங்கும்
வேக மான்கள் துள்ளிக் குதிக்கும்

காகம் கரையும் கரிக்குருவி காணமிடும்
காதற்புறாக்கள் கவிபடிக்கும்
கவின் மலர் வண்டுகள் குழல் இசைக்கும்
கலையழகு கிளிகள் கொஞ்சும் மொழி பேசும்
இல்லாமை எதும் இங்கு இல்லை
இயலாமை என்பது எதுவும் இல்லை
முயல் ஆமை கூட இங்கு உண்டு
முயலாமை எனபதே எங்கும் இல்லை

புள்ளினம் உண்டு  புல் உண்டுவாழும்
புள்ளிமானினமும் நிறைய உண்டு
கொல்லும் கொடு மாக்கள் இங்குண்டு –ஆயினும் அவை
கொல்வதிலை கொள்வதற்கு அதிகமாய் எதையும்

களவாணி மானிடக்கூட்டம் கவனமின்றி
கருணையின்றி காடுகளின் கருவறையில்
கைவைத்தது தன் கருவும் கடைசியில்
கலைபடும் என்ற கவலையின்றி

இல்லாதன எதுவும் இல்லை இயற்கை தாயின் மடியில்
இயல்பை மீறிய தன்னலச் சுரண்டலால் ஏதும்
இல்லாமல் போகும் ஒருநாள் இனி விழிப்போமா?
இல்லை இயற்கையை அழிப்போமா?
12-01-2019


No comments: