Friday, June 29, 2012

LGP திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) மற்றும் அதன் உபயோகம்

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன?
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன்களில் திரவமாக மாற்றப்பட்டு இருப்பதே ஆகும். எளிதில் சேமிக்கவும், எளிதில் எடுத்துச்செல்லுவதற்கு ஏற்றவாறு இவ்வாறு செய்யப்படுகிறது. இவை இயற்கை வாயு அல்லது கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும்போதும் பெறப்படுகின்றன. பியூட்டேன் மற்றும் புரொப்பேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவிலுள்ள முக்கியமான ஹைட்ரோகார்பன்களாகும். மற்ற ஹைட்ரோகார்பன்களான ஐசோ பியூட்டேன், பியூட்டலின், புரொப்பைலீன் மற்றும் என்-பியூட்டேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவில் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும்.
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) உபயோகங்கள் என்ன?
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான, சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.
சந்தையில் கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியவாயு (LPG) சிலிண்டர்கள் அளவுகள் என்ன?
பொதுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் கிராமப்புற பகுதிகளுக்கும், மலைப்பிரதேசங்களுக்கும் தொலைதூரப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு 5 கிலோ எடையிலும், பொது உபயோகத்திற்காக 14.2 கிலோ எடையிலும் கிடைக்கிறது. வணிகரீதியான மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு 19 கிலோ மற்றும் 47.5 கிலோவில் இவ்வாயு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் 12 கிலோ எடை கொண்ட இந்த எரிவாயு சிலிண்டர்களை பொது உபயோகத்திற்காக விற்கின்றன
வீட்டு உபயோகத்திற்கு கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வாகனங்களிலோ அல்லது இதர வணிகரீதியான தேவைகளுக்கோ உபயோகிக்கலாமா?
இல்லை. வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் LPG சிலிண்டர்கள், LPG கட்டுப்பாட்டு ஆணையின் படி, வாகனங்களிலும், இதர வணிகரீதியான தேவைகளுக்கும் உபயோகிக்கக்கூடாது.
இந்தியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் யாவை?
SLPG விற்பனையில் ஈடுபட்டுள்ள பொது நிறுவனங்களாவன
  • இந்தியன் ஆயில் நிறுவனம் (http://www.iocl.com)
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேசன் (http://www.ebharatgas.com)
  • இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேசன் (http://www.hindustanpetroleum.com)
இவ்வாயு விற்பனையில் ஈடுபட்டுள்ள சில தனியார் நிறுவனங்களுக்கான உதாரணங்கள்
  • ஸ்ரீ சக்தி எல்.பி.ஜி நிறுவனம் (http://www.shrishakti.com)
  • எஸ்.எச்.வி எனர்ஜி நிறுவனம் (www.supergas.com)
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) இணைப்பு வாங்குவதற்கான செயல்முறைகள் என்ன?
வீட்டு உபயோகத்திற்கு இணைப்பு பெறுவதற்கு மேற்கூறிய நிறுவனங்களின் விநியோகஸ்தரை அணுகவேண்டும். உங்களுடைய அருகாமையிலுள்ள விநியோகஸ்தரைக் கண்டுபிடிக்க மேற்கூறிய நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கவும்.
புதிய இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இருப்பிடச்சான்றாக காண்பிக்கவேண்டும்.
குடும்ப அட்டை, மின்சார இரசீது, தொலைபேசி இரசீது, பாஸ்போர்ட், வேலையளித்தவரின் சான்றிதழ், அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட கடிதம், வீட்டு பதிவு பத்திரம், எல்.ஐ.சி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வாடகை இரசீது, வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவையாகும். இதுதவிர சில மாநிலங்களில் குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு பெற கட்டாயமாக காண்பிக்கப்படவேண்டும்.
காஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டருக்கான வைப்பு தொகை செலுத்தப்பட வேண்டும். இவ்வைப்பு நிதி கட்டியவுடன் இணைப்பு ரசீது (Subscription voucher) கொடுக்கப்படும். இந்த இணைப்பு ரசீது பிற்கால செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதால், இதனை கவனமாக வைத்துக்கொள்வது அவசியம்.
பொது உபயோகத்திலுள்ள எல்.பி.ஜி இணைப்பினை இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கான செயல்முறைகள் என்ன?
i. ஒரே நகரத்தில் அல்லது அருகாமையிலுள்ள நகரங்களுக்கு மாற்றுதல்
  • எல்.பி.ஜி வாயு வழங்கியுள்ள விநியோகஸ்தரிடம், இணைப்பு இரசீதைக் காட்டி மாறுதலுக்கான ஆவனத்தை பெற வேண்டும்
  • இணைப்பு இரசீதுடன், மாறுதலுக்கான ஆவனத்தையும் புதிய விநியோகஸ்தரிடம் கொடுக்கவேண்டும். புதிய விநியோகஸ்தர் இதனைப் பெற்றுக்கொண்டு உண்மையான இணைப்பு இரசீதில் ஒப்புகை சீல் இட்டு இணைப்பு மாறுதலை தருவார். இந்த எரிவாயு இணைப்பு மாறுதல் மற்றும் இணைப்பு இரசீதும் புதிய விநியோகஸ்தரிடமிருந்து பத்திரமாக மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • இப்போது ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டரை பழைய விநியோகஸ்தரிடம் ஒப்படைக்கத்தேவையில்லை. இணைப்பு பெற்றவர் தங்களுடைய புதிய இருப்பிடத்திற்கு இவற்றை எடுத்துக்கொண்டு செல்லலாம்.
ii. தொலைதூரப் பகுதிகளுக்கு எரிவாயு இணைப்பினை மாற்றுதல்
  • எரிவாயு இணைப்பு இரசீதுடன், இணைப்பு மாறுதலுக்கான வேண்டுதல் கடிதத்தை விநியோகஸ்தரிடம் அளித்தவுடன், அவர்கள் அதைப்பெற்றுக்கொண்டு முடிவு இரசீதை வாடிக்கையாளரிடம் கொடுப்பார்கள். வாடிக்கையாளர் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் ஆகியவற்றை விநியோகஸ்தரிடம் திரும்பக் கொடுத்தவுடன், விநியோகஸ்தர் வாடிக்கையாளரின் வைப்புத்தொகையினை திரும்பக்கொடுத்துவிடுவார்.
  • முடிவு இரசீதில் குறிப்பிட்ட வைப்புத்தொகையினை புதிய இடத்திலுள்ள விநியோகஸ்தரிடம் செலுத்தி வாடிக்கையாளர் மீண்டும் இணைப்பினை பெற்றுக்கொள்ளலாம். புதிய விநியோகஸ்தரிடம் பெற்ற இணைப்பு இரசீதினை வாடிக்கையாளர் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்
எரிவாயு இணைப்பு கொடுக்கும்போது கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் என்ன?
எந்த இடத்தில் எரிவாயு இணைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கீழ்க்கண்ட முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை சமையலறையில் பின்பற்றினாலே அது எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கான காப்பீடு போலாகும்.
  • எரிவாயு சிலிண்டர் வைக்கும் அறை அல்லது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடியிருக்கும் அறையில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கக்கூடாது
  • எரிவாயு சிலிண்டர், அதன் அழுத்தத்தினை சரி செய்யும் நாப் அல்லது பட்டன், எரிவாயு செல்லும் இரப்பர் குழாய் போன்றவற்றை எளிதில் கையாளுமாறு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட வேண்டும்
  • தரைமட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழ் அதாவது தரைக்கு கீழ் இருக்கும் தளங்களில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கக்கூடாது.
  • சிலிண்டரை அலமாரியில் வைக்கும்போது அதன் தரைத்தளத்திலும் அதன் மேல்தளத்திலும் காற்றோட்டத்திற்கு துளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சமைக்க உதவும் எரிவாயு அடுப்பை தரையில் வைக்கக்கூடாது. நின்று கொண்டு சமைப்பதற்கு ஏற்ற வகையில் போதுமான உயரத்தில் அடுப்பை வைக்கவேண்டும். மரப்பலகையினை அடுப்பு வைக்க உபயோகிக்கக்கூடாது. மரத்தினால் ஆன பலகையினை அதன் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வைத்து அதன் மீது அடுப்பு வைக்கவேண்டும்.
  • ஜன்னலுக்கு நேராக எரிவாயு அடுப்பினை வைக்கக்கூடாது. ஏனெனில் காற்று வேகமாக வீசும் போது, அது தீயை அணைத்துவிடும். இவ்வாறு தீ அணைந்து விட்டால் எரிவாயு அந்த அறை முழுவதும் பரவி எளிதில் தீ பிடித்து விபத்து நேரிட ஏதுவாகும்
  • எரிவாயு அடுப்பினை பலகை அல்லது அலமாரியில் வைக்கும் போது அதன் ஒருபகுதி சுவரை ஒட்டி இருக்குமாறு வைக்கவேண்டும். அதாவது அடுப்பின் பின்பகுதி சுவரின் அருகில் இருக்குமாறு வைக்கவேண்டும். அடுப்பினை ஒட்டி காணப்படும் சுவரில், அலமாரி போன்றவை இருத்தல் கூடாது. அவ்வாரு இருந்தால், அதிலிருக்கும் பொருட்களை அடுப்பு எரியும் போது நீங்கள் முயற்சிக்கும் போது, உங்கள் ஆடை தீ பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது
  • ஒரு அறையில் 2 எரிவாயு சிலிண்டர்களுக்கு மேல் வைக்கக்கூடாது. இரண்டு சிலிண்டர்களை வைக்கும்போது சமையலறையின் குறைந்தபட்ச பரப்பளவு 10மீ2 ஆக இருக்கவேண்டும்
  • எப்பொழுதும் எரிவாயு சிலிண்டர்களை செங்குத்தாக அதன் வால்வு மேல் பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும. செங்குத்தாக வைக்காமல் படுக்கைவாட்டிலோ அல்லது வேறு மாதிரியாகவோ வைத்தால் எரிவாயு சிலிண்டரிலுள்ள எரிவாயு திறந்த வால்விலிருந்து வெளியேறி அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது
  • மின்சார ஓவன், மண்ணென்ணெய் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எரிவாயு அடுப்பிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்குமாறு வைக்கவேண்டும்.
  • எரிவாயு சிலிண்டரை வெயில், மழை, வெப்பம், தூசி படியும் இடங்களில் வைக்கக்கூடாது
  • சிலிண்டர் மேல் பாத்திரங்களையோ, துணியையோ வைக்கக்கூடாது
  • சிலிண்டரின் பாதுகாப்பு மூடியினை சிலிண்டரின் மேல்வளையத்துடன் இணைத்து வைக்கவேண்டும். ஏனெனில் எரிவாயு, வால்வின் வழியாக சிலிண்டரிலிருந்து கசியும்போது இந்த பாதுகாப்பு மூடியினை வால்வின் மேல் வைத்து எரிவாயு கசிவை தடுக்கமுடியும்
  • வால்வின் மீது பாதுகாப்பு மூடி போடாமல் காலி அல்லது எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரை வைக்காதீர்கள்
  • அழுத்த ரெகுலேட்டரை உபயோகிக்கும் போது, அதன் மேல் பாகத்தில் கூறிய அறிவுரைகளை பின்பற்ற தயங்காதீர்கள்
எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும்போது பொதுவான குறிப்புகள் என்ன?
i. காலி சிலிண்டர் இணைப்பினை துண்டிக்கும்போது
  • எரிந்து கொண்டிருக்கும் வாசனை பத்திகள், மெழுகுவர்த்தி மற்றும் பூஜை விளக்கு போன்றவற்றை சமையலறை மற்றும் அதன் அருகிலுள்ள அறைகளில் அணையுங்கள்
  • எரிவாயு அடுப்பிலுள்ள அனைத்து திறப்பான்களையும் மூடவும்
  • ரெகுலேட்டரிலுள்ள திறந்துள்ள நாப்பினை மூடவும்
  • ரெகுலேட்டரை நன்றாக பிடித்துக்கொண்டு அதன் அடிப்பகுதியினை மேல்நோக்கித் தள்ளி ரெகுலேட்டரைத் தூக்கவும். இப்பொழுது ரெகுலேட்டர் சிலிண்டரிலிருந்து எடுத்துவிடலாம்
  • சிலிண்டர் மீதுள்ள வால்வின் மீது பிளாஸ்டிக் பாதுகாப்பு மூடியினை அழுத்தி மூடவும். இப்பொழுது காலி சிலிண்டரை எடுத்துவிடலாம்
ii. எரிவாயு நிரம்பிய சிலிண்டரை அடுப்புடன் இணைக்கும்போது
  • சிலிண்டர் மீதுள்ள பாதுகாப்பு மூடியினை அழுத்தி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கயிற்றினை இழுத்து அந்த மூடியினை சிலிண்டரிலிருந்து தூக்கவும்
  • சிலிண்டரிலுள்ள வால்வில் பாதுகாப்பு வளையம் சரியாக இருக்கிறதா என உங்கள் சுண்டுவிரலை உபயோகித்து பரிசோதிக்கவும். இவ்வாறு வளையம் இல்லை என்றால் பாதுகாப்பு மூடியினைக்கொண்டு சிலிண்டரை மூடி, உங்கள் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு வேறு சிலிண்டரை தருமாறு கேட்கவும்
  • ரெகுலேட்டரை எரிவாயு நிரம்பிய சிலிண்டர் மீது மாட்ட கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்
  • ரெகுலேட்டரிலுள்ள நாப்பினை ‘ஆஃப்’ செய்யவும்
  • ரெகுலேட்டரை நன்றாகப் பிடித்துக்கொண்டு அதன் பிளாஸ்டிக் புஸ்ஸினை மேல்நோக்கி இழுக்கவும்
  • ரெகுலேட்டரை செங்குத்தாக சிலிண்டரின் வால்வு மீது வைத்து மெதுவாக அதன் விளிம்புப்பகுதி வால்வின் அறுங்கோணப்பகுதியினை தொடுமாறு அமுக்கி பிளாஸ்டிக் புஸ்ஸினை கீழ்நோக்கி விடவும். இப்பொழுது ‘கிளிக்’ எனும் சத்தம் கேட்கும்
  • இப்பொழுது ரெகுலேட்டர் சிலிண்டரில் பொருத்தப்பட்டுவிட்டது
iii.எரிவாயு அடுப்பிலிலுள்ள எரிப்பானை எரியச்செய்யும்போது
  • <
  • ரெகுலேட்டரிலுள்ள நாப்பினை கடிகார திசைக்கு எதிர் திசையில் திருகி ‘ஆன்’ செய்யவும்
  • தீக்குச்சியினை பற்றவைத்து அடுப்பிலுள்ள எரிப்பானுக்கு அருகில் கொண்டு சென்று அடுப்பிலுள்ள நாப்பினை ‘ஆன்’ செய்யவும்
iv. மற்றவை
  • சமைக்கும்போது நைலான் உடைகளையோ அல்லது அதுபோன்ற துணிகளால் ஆன உடைகளையோ அணியாதீர்கள்
  • சமைக்கும்போது அடுப்பினை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்
  • எப்பொழுதும் எரிவாயு இணைப்பினை நீங்களாகவே பழுதினை சரிசெய்யவோ அல்லது மாற்றவோ அல்லது ஆய்வோ செய்யாதீர்கள்
  • இரவு நேரங்களிலும், சமைத்து முடித்தபின்பும் ரெகுலேட்டரை அணைக்காமல் இருக்காதீர்கள்
  • எரிவாயு அடுப்பினை பற்றவைக்கும்போது எப்பொழுதும் வாயுவின் நாற்றம் வருகிறதா என பரிசோதியுங்கள்
  • எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்றவை இல்லாமல் முடிந்தவரை சமையலறையினை சுத்தமாக பராமரியுங்கள்
நுகர்வோருக்கான பொதுவான பாதுகாப்புக்குறிப்புகள் என்ன?
i. எரிவாயு அடுப்புடன் இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் மற்றும் அழுத்த ரெகுலேட்டரைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியது
  • மேற்கூறிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும் (ISI/BIS)
  • BIS அங்கீகரித்த இரப்பர் குழாய்களையும், எரிவாயு ரெகுலேட்டர்களை அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே வாங்கவேண்டும்
  • இரப்பர்குழாய் முடிந்தவரை குறைந்த நீளம் கொண்டதாக இருக்கவேண்டும். அதன் அதிகபட்ச நீளம் 1.5 மீட்டர் இருக்கவேண்டும்
  • நீங்கள் உபயோகிக்கும் எரிவாயு அடுப்பிலுள்ள எரிவாயு செல்லும் குழாயின் துளை, எரிவாயு அடுப்பினை சிலிண்டருடன் இணைக்கும் இரப்பர் குழாயின் துளை மற்றும் ரெகுலேட்டரின் துளையின் அளவே இருக்கவேண்டும்
  • இவை எளிதில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும
  • ரெகுலேட்டர் மற்றும் இரப்பர் குழாயினை வெப்பம் மற்றும் தீயிலிருந்து தள்ளி வைக்கவேண்டும்
  • எரிவாயு அடுப்பிலுள்ள துளையிலும், ரெகுலேட்டரிலுள்ள துளையிலும் இரப்பர் குழாயினை முழுவதுமாக சொருகவேண்டும
  • இரப்பர்குழாய் பர்னரினால் சூடேராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது தவிர இக்குழாய் முடிச்சு போடாதவாறும், முறுக்காதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்
  • இரப்பர்குழாயினை ஈரத்துணி கொண்டே சுத்தம் செய்யவேண்டும். அதனை அடுப்பிலுள்ள துளையினுள் பொருத்த சோப்பு உபயோகப்படுத்தக்கூடாது
  • இரப்பர்குழாயில் வெடிப்பு, ஒட்டை, இளக்கம் ஆகிய குறைபாடுகள் குறிப்பாக அதன் இரண்டு முனைகளிலும் இருக்கிறதா என குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கவேண்டும்
  • இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இரப்பர்குழாயினை மாற்றவேண்டும்
  • வலை அல்லது எந்த பொருளாலும் இரப்பர் குழாயை சுற்றக்கூடாது
எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள அழுத்த ரெகுலேட்டரும் முக்கியமாகும். இது சிலிண்டரின் வாயு வெளிவரும் வால்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிலிண்டரிலிருந்து வெளிவரும் எரிவாயுவின் அழுத்தத்தினை ஒழுங்குபடுத்துவதோடு, எரிவாயு அடுப்பின் பர்னருக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் எரிவாயுவினை செலுத்தும்.
ii. எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது கவனிக்கவேண்டியவை
  • சிலிண்டரை வாங்கும்போது அதில் விற்பனை நிறுவனத்தின் முத்திரை இருக்கிறதா என்றும் அதன் பாதுகாப்பு மூடி நன்றாக மூடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்
  • எரிவாயு சிலிண்டரை உபயோகிப்பது பற்றி சரியாக தெரியவில்லை எனில் அதனை விநியோகிக்கும் நபரிடம் செய்முறை விளக்கம் தருமாறு கேட்கவும்
  • எரிவாயு சிலிண்டர் தரைமட்டத்தில், ஒரு சமமான தரையில் இருக்குமாறு வைக்கவேண்டும்
iii. சிலிண்டரை உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
  • சிலிண்டர் வால்வுக்கு உள்ளே வட்ட வடிவ பாதுகாப்பு வளையம் இருக்கிறதா எனப் பரிசோதிக்கவும்
  • சிலிண்டரில் எதாவது எரிவாயு கசிவு இருக்கிறதா என்பதை நன்றாக ஆய்வு செய்வதன் மூலமோ அல்லது சோப்பு நீர் மூலமோ அல்லது வாசனை மூலமோ பரிசோதிக்கவும்
  • பற்றவைக்கப்பட்ட தீக்குச்சிகளை எரிவாயுக்கசிவு இருக்கிறதா எனப்பரிசோதிக்க உபயோகித்தல் கூடாது
  • எரிவாயு சிலிண்டரை எப்பொழுதும் செங்குத்தாக தரைமட்டத்தில் காற்றோட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்கவும்
  • மூடப்பட்ட அலமாரியில் எரிவாயு சிலிண்டரை வைக்கவேண்டாம்
  • சமையலறையில், எரிவாயு அடுப்பு எப்பொழுதும் சிலிண்டரை விட உயரத்திலிருக்குமாறு வைக்கவேண்டும்
  • வெப்பம் உண்டாக்கும் பொருட்களிலிருந்து எரிவாயு சிலிண்டரை தூரத்தில் வைக்க வேண்டும்
iv. எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும்போது கவனிக்கவேண்டியவை
  • சிலிண்டர் உபயோகிக்காதபோது ரெகுலேட்டர் நாபினை அணைத்து வைக்கவும்
  • காலி சிலிண்டர்களை காற்றோட்டம் அதிகமுள்ள, குளிர்ந்த இடத்தில் அதன் பாதுகாப்பு மூடியினைப்போட்டு வைக்கவும்
எரிவாயு வாசனை வந்தால் என்ன செய்வது?
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிறமற்ற, வாசனையற்ற வாயுவாகும். எனவே ஒரு குறிப்பிட்ட வாசனையினை இந்த வாயுவுடன் சேர்க்கும்போது எரிவாயு கசிவினை எளிதில் கண்டுபிடிக்கலாம். பாதிப்பு உண்டாக்கக்கூடிய வாயுவின் அளவில், ஐந்தில் ஒரு பங்கு அளவு வாயு, காற்றில் காணப்படுமாயின், இந்த வாசனையினை கண்டுபிடிக்கலாம். எரிவாயுவின் வாசனையினை உணர்ந்தால்
  • பயப்படாதீர்கள்
  • மின்சார ஸ்விட்ச்களை உபயோகிக்காதீர்கள். மின்சாரத்தினை வழங்கும் மெயின் இணைப்பை ஆப் செய்யவும்
  • எரிவாயு அடுப்பின் நாப்கள் மூடியிருக்கின்றனவா என உறுதி செய்துகொள்ளவும்
  • எரிவாயு கசிவு உணரப்பட்டால் தீக்குச்சியினை பற்றவைக்காதீர்கள். எல்லா விளக்குகள், ஊது பத்திகள் மற்றும் இதர எரியும் பொருட்களை அணைக்கவும்
  • எல்லா கதவு மற்றும் ஜன்னல்களை திறந்துவிடவும்
  • இப்பொழுதும் எரிவாயு வாசனை வந்தால், அலுவலக நேரத்தில் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களை தொடர்பு கொள்ளவும். அலுவலக நேரம் இல்லையெனில் அவசர சேவையினை தொடர்பு கொள்ளவும்
  • அனுபவமுள்ளவர்கள், ரெகுலேட்டரை சிலிண்டரிலிருந்து துண்டித்து, பாதுகாப்பு மூடியினை சிலிண்டரில் பொருத்தலாம்
மூலம்: எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வலைத்தளம்
சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமிருந்து குறிப்பிட்ட சமையல் எரிவாயு அடுப்பையோ அல்லது இதர சாமான்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு எவ்வித நிர்பந்தத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமிருந்து குறிப்பிட்ட சமையல் எரிவாயு அடுப்பையோ அல்லது இதர சாமான்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு எவ்வித நிர்பந்தத்தையும் ஏற்படுத்தக் கூடாது. வாடிக்கையாளர்கள் யாரிடம் இருந்து வேண்டுமென்றாலும், அவர்களுக்கு விருப்பமான அடுப்பை வாங்கிக் கொள்ளலாம். இக்தகவலை வாடிக்கையாளர்களுக்கு அச்சு மற்றும் ஊடகங்களின் விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தகவலை சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் இரசீது மூலமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொது துறை எண்ணெய் வர்த்தக கம்பெனிகள்(OMCs) வாடிக்கையாளர்கள் சேவையை அதிகப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் நம்பகமான தரமான பொருள்களை அளிக்கவும், அவர்கள் தங்களுடைய வர்த்தகர்களை எரிதிறன் அதிகம் உள்ள அடுப்புகள், சுரக்க்ஷா பைப்புகள், தீ அணைப்பான், சமையல் அறை சாமான்கள் (பிரஷர் குக்கர், நான்ஸ்டிக் சாமான்கள், இன்டக்க்ஷன் குக்கர் முதலியன) போன்றவற்றை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வகையான வர்த்தகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) ‘எரிவாயு அற்ற வர்த்தக செயல்கள்’ என்றும், இதனை பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) ‘சமையல் எரிவாயுவுக்கு அப்பால்’ என்றும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) ‘எரிவாயு சார்ந்த இதர வர்த்தகம்’ என்றும் குறிக்கின்றது.
அமைச்சகமானது OMC-யிடம் புது எரிவாயு இணைப்பு கொடுக்கும் போது எந்த விநியோகஸ்தராவது வாடிக்கையாளர்களை குறிப்பட்ட பொருளை வாங்குவதற்கு நிர்பந்தித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது உறுதி செய்யப்பட்டால் வர்த்தக ஒழுங்குமுறை விதிகள் (MDG) படி விநியோகஸ்தரை தண்டிக்க வேண்டும்.
நன்றி :இந்திய முன்னேற்ற நுழைவாயில் http://www.indg.in/india

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_8.html சென்று பார்க்கவும்... நன்றி...